Friday 3 July 2015

தேசிய ஆன்லைன் விவசாய சந்தை உருவாக்கம் ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் மத்திய அரசு அறிவிப்பு

புதுடெல்லி,
ரூ.50 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டம் அமல்படுத்தப்படும்; தேசிய ஆன்லைன் விவசாய சந்தை உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ரூ.50 ஆயிரம் கோடி திட்டம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு, டெல்லியில் நேற்று முன்தினம் (புதன்கிழமை) கூடியது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி, நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
நாட்டில் உள்ள விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதி அளிப்பதற்கான பிரதான் மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ், அடுத்த 5 ஆண்டுகளில் மத்திய பட்ஜெட்டில் ரூ.50 ஆயிரம் கோடி செலவிடப்படும். இதை விட மாநிலங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
பாசன வசதி
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் இதை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நடப்பு நிதி ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
(இதில் கூடுதலாக 6 லட்சம் ஹெக்டேர் நிலம் பாசன வசதி பெறும். 5 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பு சொட்டு நீர்ப்பாசன வசதி பெறும்.)
கள அளவில், முதலீடுகளை குவித்து சாதனை படைப்பது, சாகுபடி நிலப்பரப்பை பெருக்குவது, பிற தண்ணீர் சேமிப்பு முறைகளை பயன்படுத்துவது உள்ளிட்டவை இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்கள் ஆகும்.
வழிகாட்டும் குழு
இந்த திட்டத்தின் கட்டமைப்பு, மாநில அளவிலான பார்வையை கொண்டது. இதனால் மாநிலங்கள், மாவட்ட அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை, மாநில அளவிலான நீர்ப்பாசன திட்டங்களை தீட்டலாம்.
இந்த திட்டம், பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சகங்களுக்கு இடையேயான தேசிய வழிகாட்டும் குழுவின்மூலம் கண்காணிக்கப்படும். வளங்கள் ஒதுக்கீடு செய்தல், அமைச்சகங்களுக்கு இடையே ஒருங்கிணைத்தல், செயல்பாடுகளை அளவிடுதல், நிர்வாக பிரச்சினைகளை கவனித்தல் ஆகியவற்றுக்காக தேசிய செயற்குழு ஒன்றும் நிதி ஆயோக்கின் துணைத்தலைவர் தலைமையில் அமைக்கப்படும்.
இணையவழி விவசாய சந்தை
தேசிய ஆன்லைன் விவசாய சந்தை (இணைய வழியிலான சந்தை) ஒன்று உருவாக்கப்படும். இதற்காக 3 ஆண்டுகளுக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஆன்லைன் விவசாய சந்தை, நாடு முழுவதும் உள்ள 585 மொத்த விற்பனை சந்தைகளை ஒருங்கிணைக்கும்.
ஒட்டுமொத்த மாநிலத்துக்கு ஒரு உரிமம், ஒரு முனை வரி அமல்படுத்தப்படும். விலை நிர்ணயத்துக்காக மின்னணு வழி ஏலம் நடைபெறும். இதன் விளைவாக ஒரு மாநிலமே சந்தை ஆகும்.
இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 585 ஒழுங்குபடுத்தப்பட்ட சந்தைகள் வரும். மாநிலத்திற்குள் வேளாண் விளைபொருட்கள் பரிமாற்றம் நடைபெறும். இதன் மூலம் விவசாயிகளின் சந்தை அளவு பெருகும்.
முதலாவது ஒருங்கிணைந்த தேசிய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் கொள்கைக்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dailythanthi

No comments:

Post a Comment