Thursday 11 June 2015

திருந்திய நெல் சாகுபடி செய்ய அறிவுறுத்தல்:


கோடை மழையைப் பயன்படுத்தி திருந்திய நெல் சாகுபடி முறையில் நெல் பயிரிட நாற்றங்கால் பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து, வேளாண் அதிகாரிகள் தெரிவித்தது:
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது பரவலாக பெய்து வரும் மழையை விவசாயிகள் ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மழையின் ஈரத்தை பயன்படுத்தி, கோடை உழவுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால், நிலத்தில் நீர் இறங்கும் திறன் அதிகரிப்பதோடு, மண்ணில் காற்றோட்டம் ஏற்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாடும் அதிகரித்து மண்வளம் கூடும்.
இதனால், கோரை போன்ற களைகள் பெருமளவு கட்டுப்படுத்தப்படுவதோடு, நிலத்தின் அடியில் உள்ள கூண்டுப் புழுக்கள் மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகின்றன.
மேலும், மானாவாரி நிலக்கடலை சாகுபடி செய்ய உள்ள விவசாயிகள் மழையை பயன்படுத்தி, கோடை உழவு செய்து விதைப்புக்குத் தயார் செய்யலாம்.
ஏற்கெனவே, விதைப்பதற்கு தயாராக உள்ள விவசாயிகள் ஈரத்தை பயன்படுத்தி விதைப்பு செய்யலாம். பசுந்தாள் உரப்பயிர்களான சனப்பு விதைகளை, விதைப்பு செய்து பூப்பூக்கும் முன் மடக்கி உழவு செய்தால் மண் பெருகி, தொடர்ந்து சாகுபடி செய்யும் பயிர்களில் குறிப்பாக குறுவை மற்றும் சம்பா நெற்பயிர்களில் நல்ல மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது.
நீர்வசதி உள்ள குறுவை சாகுபடி செய்யவுள்ள விவசாயிகள், திருந்திய நெல் சாகுபடி முறையில் சாகுபடி மேற்கொள்ள நாற்றங்கால் பணிகளை மேற்கொள்ளலாம்.
14 நாள்கள் வயதுடைய இளம் நாற்றுகளை மழையின் ஈரத்தை பயன்படுத்தி குறுகியகால நாற்றங்கால் அமைத்து நடவு செய்யலாம். இதனால், நீர் தேவை குறைவதோடு அதிக மகசூல் கிடைக்கும் என்றனர்.


Source:  http://www.dinamani.com/edition_dharmapuri/namakkal/2015/06/12/திருந்திய-நெல்-சாகுபடி-செய்/article2862361.ece

No comments:

Post a Comment