Monday 8 June 2015

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி குறித்து விளக்கம்

இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்து, அதிக உற்பத்தியை பெறுவது குறித்து பல்லடம் தோட்டக்கலை துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்.
இது குறித்து பல்லடம் தோட்டக்கலை துறை உதவி இயக்குநர் சுகந்தி கூறியது:
விவசாய நிலங்களில், இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளைக் கொண்டு காய்கறிப் பயிர்களை தாக்கும் பூச்சிகளை விரட்ட முடியும். இதனால், விவசாயிகளுக்கு செலவு குறைவதுடன், இயற்கையான, தரமான காய்கறிகளையும் மக்களுக்கு விற்பனை செய்யலாம்.
காய்கறி சாகுபடிகளில், பூச்சிகளை இனப்பெருக்கம் செய்ய விடாமல், விரட்டினாலே பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து காய்கறி உற்பத்தி குறைவது கட்டுப்படுத்தப்படும்.
கால்நடைகள் உண்ணாத கசப்புச் சுவை கொண்ட, துர்நாற்றம் வீசும் மூலிகைகளை சேகரித்து பூச்சிகளை விரட்ட பயன்படுத்தலாம். நொச்சி இலை, சங்குப்பூ இலை, எருக்கம்பூ இலை, சோற்றுக்கற்றாழை, வேப்பம் இலை, ஆடுதொடா இலை, கருவேலம், புங்க மர இலை, விதைகள், காட்டாமணக்கு, ஊமத்தை இலைகள், காய்கள் உள்பட 10 தாவர இலைகளை தலா அரை கிலோ வீதம் எடுத்து, 20 லிட்டர் கோமியம், இரண்டு கிலோ பசுஞ்சாணம் ஆகியவற்றை கலந்து, பிளாஸ்டிக் கொள்கலனில் அடைக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு இரு முறை கலக்க வேண்டும். 15 நாள்களுக்குள் நொதித்தல் முறையில் பூச்சி விரட்டி தயாராகி விடும். இவற்றை வடிகட்டி, தெளிவான கரைசலை பூச்சி விரட்டியாக பயன்படுத்தலாம்.
இதனால் உடல் நலனுக்கு பாதிப்பில்லாத தரமான காய்கறிகளை உற்பத்தி செய்ய முடியும் என்றார்.


Source : Dhinamani

No comments:

Post a Comment