Friday 19 June 2015

வெங்காய சாகுபடியில் ஒருங்கிணைந்தபயிர் பாதுகாப்பு முறை ஆலோசனை


தேனி:தேனி மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறை சார்பில் "நஞ்சு இல்லாத காய்கறி சாகுபடி' பற்றி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதில் வெங்காய சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு முறையாக நடவு வயலை சுற்றி இரு வரிசையில் மக்காச்சோளம் பயிரிட வேண்டும்.

தரமான பூச்சி நோய் தாக்குதல் இல்லாத விதை வெங்காயத்தை தேர்வு செய்யவேண்டும். விதை நேர்த்தியாக ஒரு கிலோ விதைக்கு சூடோனோனஸ் புளுரோசன்ஸ் 5 கிராம், டிரைகோடெர்மா விரிடி 5 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். நடவு வயலில் ஒரு எக்டேருக்கு சூடோமோனஸ் புளுரோசன்ஸ் 1.25 , டிரைகோடெர்மா விரிடி 1.25 கிலோ, வாம் 1.25 கிலோ, அசோஸ்பைரில்லம் 2 கிலோ, பாஸ்போபாக்டீரியா 2 கிலோ, வேப்பம் புண்ணாக்கு 250 கிலோ வீதம் கலந்து மண்ணில் இடவும். மஞ்சள் ஒட்டுப்பொறி எக்டேருக்கு 12 எண்கள் வீதம் வைத்து வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்தலாம்.

இனக்கவர்ச்சி பொறி எக்டேருக்கு 12 வீதம் வைத்து புழுக்களின் தாய் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கவும். சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் 5கிராமுடன் பிரிவேரியா பேசியானா 10 கிராம் ஒரு லிட்டர் நீரில் கலந்து 30ம் நாள் தெளித்து தடுப்பு முறைகளை மேற்கொள்ளலாம். பூச்சி நோய்களை கட்டுப்படுத்த அசாரடிராக்டின் மருந்தினை 2 மில்லி ஒரு லிட்டர் நீர் வீதம் கலந்து 40 ம் நாளில் தெளித்து கட்டுப்படுத்தலாம் என தோட்டக்கலை துறை துணை இயக்குனர் சுரேஷ்ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment