Monday 29 June 2015

தோட்டக்கலைத் துறை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் வழங்கும் முகாம்



தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன்பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் முகாம், புதன் மற்றும் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
 இதுகுறித்து, தோட்டக்கலை துணை இயக்குநர் (பொ) பிரபு திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
 ஈரோடு மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக தோட்டக்கலை பயிர்களுக்கான பல்வேறு திட்டப் பணிகள் விவசாயிகளின் நலன் கருதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து வட்டாரங்களிலும் தேசிய தோட்டக்கலை இயக்கம் என்ற திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மா அடர்வு நடவு, கொய்யா அடர் நடவு, பப்பாளி சாகுபடி உள்ளிட்ட இனங்களுக்கு 40 முதல் 75 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல, தேசிய நீடித்த வேளாண்மை இயக்கம் என்ற திட்டத்தில் பண்ணை நீர் மேலாண்மை என்ற இனத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு 75 முதல் 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.  விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், திட்டங்களில் பயனடையவுள்ள விவசாயிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறவும் தோட்டக்கலைத் துறை மூலமாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தோட்டக்கலை அலுவலக வளாகத்தில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.  அதன்படி, ஈரோடு, நம்பியூர், தாளவாடி, அந்தியூர், சத்தி, அம்மாபேட்டை, மொடக்குறிச்சி, டி.என்.பாளையம், பெருந்துறை ஆகிய வட்டாரங்களில் ஜூலை 1-ஆம் தேதி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.  ஜூலை 2-ஆம் தேதி பவானிசாகர், பவானி, கொடுமுடி, கோபி, சென்னிமலை ஆகிய வட்டாரங்களில் முகாம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment