Friday 19 June 2015

மானாவாரி பயிர்களுக்கு மண் பரிசோதனை அவசியம் விவசாயிகளுக்கு அதிகாரி யோசனை

பெரம்பலூர், : பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள், மானாவாரி பயிர்களுக்கு மண் பரிசோதனை செய்வது மிக அவசியம் என வேளாண் அறிவியல் மைய அதிகாரி ஆலோசனை வழங்கியுள்ளார்.  இது குறித்து ரோவர் வேளாண் அறிவியல் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) விஜயலட்சுமி தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில் மானாவாரிப் பயிர்களாக பருத்தி, மக்காச்சோளம் உள்ளிட்டவை ஆடிப்பட்டத்தில் பயிரிடப்படவுள்ளது. தற்பொழுது கோடை உழவுப்பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் பருத்தி, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு மண் பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் உரமிடுதல் மிகமிக அவசியமாகும்.

மண் பரிசோதனை செய்வதற்கு தொழு எரு மற்றும் அடியுரம் இடும் முன்னர் ஒரு ஏக்கரில் ஆங்காங்கே 4 அல்லது 5 இடங்களைத் தேர்வு செய்து, அந்த இடங்களில் உள்ள மேல் மண்ணை லேசாக எடுத்துவிட்டு, 15செமீ ஆழத்திற்கு ஏ வடிவத்தில் குழி எடுத்து, பிறகு இருபுறமும் சரித்து அதிலிருந்து 500கிராம் அளவிற்கு மண்ணை சேகரிக்க வேண்டும்.பிறகு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலக்கி பகுத்து பிரித்தல் முறையில் 500 கிராம் அளவிற்கு குறைத்து மண் மாதிரியை சேகரிக்க வேண்டும்.

 சேகரித்த மண் மாதிரியுடன் விவசாயி பெயர், முகவரி, நில அளவை எண், முன் மற்றும் பின் பருவ பயிர்கள், தொலைப்பேசி எண் ஆகியவற்றைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மண் ஆய்வுக் கூட்டத்தில் கொடுக்கவேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தில் வாலிகண்டபுரம் ரோவர் வேளாண் அறிவியல் மையம், மாவட்ட மண் பரிசோதனைக்கூடம், நடமாடும் மண் பரிசோதனைக்கூடம் ஆகியவற்றில் பரிசோதனை செய்துகொள்ளலாம். மேலும் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்கள், வேளாண்மை விரிவாக்க மைய அலுவலகங்களில், வேளாண் உதவி  அதிகாரியிடம் கொடுத்து மண் ஆய்வு முடிவுகளைப் பெறலாம்.
மண் ஆய்வுக் கூடத்தில் மண் பரிசோதனைக்குப் பிறகு மண் பரிசோதனைக் கையேடு வழங்கப்படும். இந்தக் கையேட்டில் வயலில் உள்ள சத்துக்களின் அளவுகளும், பயிரிடப்படும் பயிரிருக்குத் தேவையான உரத்திற்கான பரிந்துரைகள், அடியுரம் முதல் மேலுரம், 2வது மேலுரம் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்கும். இதன் அடிப்படையில் பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் வயலுக்குத் தேவையான உரமிட்டு, அதன் மூலம் கூடுதல் மகசூலைப் பெற்று லாபம் அடையலாம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வாலிகண்டபுரத்திலுள்ள ரோவர் வேளாண் அறிவியல் மையத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.
Source:

No comments:

Post a Comment