Wednesday 10 June 2015

தென் மாவட்ட பண்ணையாளர்களுக்காக நடமாடும் கால்நடை நோய் கண்டறியும் ஆய்வகம்


திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடை வளர்ப்போர், விவசாயிகள், பண்ணையாளர்களுக்காக திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடமாடும் நோய் கண்டறியும் ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியான திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ராமையன்பட்டியில் இயங்கி வருகிறது. தென்மாவட்டங்களைச் சேர்ந்த கால்நடைப் பண்ணையாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரவர் பண்ணை இருப்பிடத்துக்கே சென்று, நோய்ப் பரிசோதன செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்குவதற்காக இக் கல்லூரிக்கு நடமாடும் நோய் கண்டறியும் ஆய்வக வாகனம் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனத்தில், கால்நடைகளுக்கான ரத்த, சிறுநீர் பரிசோதனை, ரத்த உப்பு வகை கண்டறிதல், உடல் அணு அமைப்பியல் சோதனை உள்ளிட்ட சிறிய அளவிலான பரிசோதனைகள் செய்வதற்கான அனைத்து உபகரணங்களும் இடம்பெற்றுள்ளன.
24 மணிநேரமும் இயங்கும் வகையில் உள்ள இந்த ஆய்வகத்தில் ஓட்டுநர், பேராசிரியர், ஆய்வக உதவியாளர் என 3 முதல் 4 பேர்வரை பணியில் இருப்பர். தேவைப்படும்
நேரத்தில் கல்லூரியில் பல்வேறு துறையைச் சேர்ந்த ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து குறிப்பிட்ட கிராமங்களுக்குச் சென்று கால்நடைகளைப்
பரிசோதித்து நோய்த் தடுப்பு முறைகள் குறித்து விளக்கிக் கூறுவர். 
இவைதவிர, மர்ம நோய் தாக்கி கால்நடைகள் இறப்பது அதிகமிருந்தால் தொடர்புடைய கிராமங்களுக்குச் சென்று இறந்த கால்நடைகளின் மாதிரிகளை எடுத்துவந்து அவற்றைப் பரிசோதிக்க கல்லூரி ஆய்வகத்தில் நவீன வசதி செய்துதரப்பட்டுள்ளது. முன்பு சென்னைக்கு மாதிரிகளை அனுப்பிவந்த நிலை இனி தேவையில்லை. திருநெல்வேலியிலேயே பரிசோதனை செய்து தடுப்பு மருந்து வழங்க முடியும்.
இதன் ஒருபகுதியாக இந்த சிறப்பு வாகனத்தின் செயல்பாட்டை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சு. திலகர், புதன்கிழமை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் சே. பிரதாபன், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.



Source: http://www.dinamani.com/edition_thirunelveli/thirunelveli/2015/06/11/தென்-மாவட்ட-பண்ணையாளர்களுக/article2860646.ece

No comments:

Post a Comment