Wednesday 10 June 2015

தென்னையை தாக்கும் தஞ்சை வாடல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு வழிகாட்டல்

சேதுபாவாசத்திம், :  தென்னையை தாக்கும் தஞ்சை வாடல்நோய் மற்றும் குறுத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னையை தாக்கும் நோய்களில் தஞ்சை வாடல்நோய் மற்றும் குறுத்தழுகல் நோய் மிக முக்கியமானதாகும். தஞ்சை வாடல்நோயானது தென்னையின் தண்டுப்பகுதியின் அடிப்பாகத்தில் பழுப்பும், சிவப்பும் கலந்த சாறு வடியும். வாடல்நோய் தாக்கப்பட்ட மரத்தின் அடிமட்டைகள் பழுப்பு நிறமடைந்து காய்ந்து தொங்கும். பிறகு நாளடைவில் மரத்தின் மட்டைகள் கீழே விழுந்து மரம் மொட்டையாக மாறும். 

இதை கட்டுப்படுத்த வறட்சி காலத்தில் அடிக்கடி தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நோய் தாக்கிய மரம் ஒன்றுக்கு பரிந்துரைக்கப்படும் ரசாயன உரங்களுடன் 50 கிலோ தொழு உரம் மற்றும் 5 கிலோ வேப்பம்புண்ணாக்கு கலந்து இட வேண்டும். வாழையை ஊடுபயிராக சாகுபடி செய்வதன் மூலம் இந்நோயின் தாக்குதலை குறைக்க முடியும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் என்ற உயிர் பூசானத்தை 50 கிலோ மக்கிய தொழு எருவுடன் கலந்து மரத்தை சுற்றி 3 அடி தூரத்தில் வைத்து இந்நோயை கட்டுப்படுத்தலாம். 

பாஸ்போ பாக்டீரியா என்ற நுண்ணுயிர் 200 கிராமுடன் (1 பாக்கெட்) 10 கிலோ தொழு உரம் கலந்து இடுவதன் மூலம் இந்நோயின் பாதிப்பை குறைக்கலாம். நோய் தாக்கிய ஒவ்வொரு மரத்துக்கும் 40 லிட்டர் வீதம் 1 சத போர்டோ கலவையை (400 கிராம் மயில்துத்தத்தை 20 லிட்டர் நீரிலும், 400 கிராம் நீர்த்த சுண்ணாம்பை 20 லிட்டர் நீரிலும் கரைத்த கலவை) மரத்தை சுற்றி 1.8 மீட்டர் வட்ட பாத்தியில் மண் நன்றாக நனையுமாறு ஊற்றினால் நோய் பூஞ்சானத்தை அழிக்கலாம். இந்நோயை கட்டுப்படுத்த ஆரியோபஞ்சின்சால் 2 கிராம், தாமிர சல்பேட் ஒரு கிராம் ஆகியவற்றை 100 மில்லி தண்ணீரில் கலந்து வேர் மூலம் செலுத்த வேண்டும். வேரூட்டம் செய்ய பென்சில் அளவு தடிமன் உள்ள புதிய இளஞ்சிவப்பு வேரை கூரிய கத்தியாள் சாய்வாக வெட்டி மேற்படி கரைசலில் உள்ள பாலித்தீன் பையில் நுழைத்து கட்டி வைக்க வேண்டும். 

குருத்தழுகல் நோயை பொறுத்தவரை தென்னங்கன்றுகளிலும் இளம்மரங்களில் மட்டுமே காணப்படும். குருத்தின் பச்சைநிறம் மாறி மஞ்சளாகி பின்னர் அழுகி வாடிவிடும். இதை கட்டுப்படுத்த ஒரு கிலோ மயில்துத்தம் மற்றும் ஒரு கிலோ சுண்ணாம்பு தூளை தனித்தனியே 5 லிட்டர் நீரில் கரைத்து போர்டோ பசையை தயாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குருத்து பகுதியில் இந்த பசையை தடவி மழைநீர் படாதவாறு பார்த்து கொண்டால் இந்நோய் எளிதில் கட்டுப்படும்.


Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=462541&cat=504

No comments:

Post a Comment