Thursday 18 June 2015

உர இருப்பு குறித்து விவசாயிகளுக்கு எஸ்.எம்.எஸ்., : வேளாண்துறை புது திட்டம்


விருதுநகர் :வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்களில் உர இருப்பு குறித்து விவசாயிகளுக்கு அலைபேசி மூலம் எஸ்.எம்.எஸ்., தெரிவிக்க வேளாண்துறை திட்டமிட்டுள்ளது.மாவட்டங்களில் வேளாண் கூட்டுறவு வங்கிகள், தனியார் விற்பனை நிலையங்களில் உரம் விற்கப்படுகிறது. இவற்றின் உர இருப்பு குறித்து விவசாயிகள் நேரில் சென்றுதான் தெரிந்துகொள்ள வேண்டும். இந்நிலையில் அதுகுறித்து அலைபேசியில் எஸ்.எம்.எஸ்., மூலம் விவசாயிகளுக்கு தகவல் தெரிவிக்க வேளாண் துறை புதிய திட்டமிட்டுள்ளது.
அத்துறை உயரதிகாரி ஒருவர் கூறுகையில், “www.tnagrisnet.tn.gov.in என்ற தமிழக அரசின் வேளாண்துறை இணையதளத்தில் பண்ணை பயிர் மேம்பாட்டு திட்ட பகுதி உள்ளது. 
ஒன்றிய வாரியாக வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பில் உள்ள யூரியா, டி.ஏ.பி., எம்.ஓ.பி.,காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உர விபரங்கள் குறித்து வாரம்தோறும் அதன் பொறுப்பாளர்கள் 'ஆன்ட்ராய்டு' அலைபேசியில் இருந்து இணையதள முகவரியில் பதிவு செய்து வருகின்றனர். 
அதற்கான 'சாப்ட்வேர்' அவர்களது அலைபேசியில் பதிவிறக்கம் செய்து தரப்பட்டுள்ளது. விவசாயிகளின் அலைபேசி எண்கள் வேளாண்துறையிடம் உள்ளன. துறைதொடர்பான பல்வேறு தகவல்கள் அவர்களுக்கு எஸ்.எம்.எஸ்.,மூலம் அனுப்பப்பட்டு வருகின்றன. இதுபோல் வட்டார வாரியாக உர இருப்பு குறித்து எஸ்.எம்.எஸ்., அனுப்ப புது திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் இது நடைமுறைப்படுத்தப்படும். இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல் மிச்சமாவது மட்டுமின்றி தங்கள் பகுதி விற்பனை நிலையங்களில் உர இருப்பு குறித்து தெளிவாக தெரிந்து கொள்ளலாம். வெளிப்படை தன்மை ஏற்பட்டு தேவையற்ற சர்ச்சைகளும் 
தவிர்க்கப்படும்,”என்றார்.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1277923

No comments:

Post a Comment