Monday 15 June 2015

"கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்'



தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை அமைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழக அரசு கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கோழி வளர்ப்புத் திட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருவதோடு, நிகழாண்டும் செயல்படுத்த அரசாணை வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் 5ஆயிரம் கறிக்கோழிகள் கொண்ட கோழிப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு திட்ட மதிப்பீடான ரூ.10.75 லட்சத்துக்கு தமிழக அரசு மற்றும் நபார்டு வங்கி இணைந்து 50 சதவீத மானியத் தொகையாக ரூ.5.38 லட்சம் வழங்குகிறது.
250 நாட்டுக்கோழிகள் கொண்ட கோழிப்பண்ணை அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு திட்ட மதிப்பீடான ரூ.1.29 லட்சத்துக்கு அரசு மற்றும் நபார்டு வங்கி இணைந்து 50 சதவீதம் மானியத்தொகையாக ரூ. 65 ஆயிரம் வழங்குகிறது.
மேலும், தாழ்த்தப்பட்டோருக்கு கோழிப்பண்ணை அமைக்க தமிழக அரசின் 25 சதவீத மானியம் மற்றும் நபார்டு வங்கியின் 33 சதவீத மானியம் என மொத்தம் 58 சதவீதம் மானியமாக வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் கோழிப்பண்ணை அமைக்க விருப்பமுள்ளவர்கள் வங்கிகள் மூலம் கடன் பெற்றோ அல்லது சுய மூலதனம் மூலமாகவோ பண்ணை அமைக்கலாம். சுய மூலதனம் மூலம் கோழிப்பண்ணை அமைப்பவர்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத மானியம் மட்டுமே வழங்கப்படும்.
5000 கறிக்கோழி வளர்க்க தேவையான நிலம், கோழி ஒன்றுக்கு ஒரு சதுர அடி வீதம் 5000 சதுர அடி சொந்தமாக கிராமப்புறங்களில் இருத்தல் வேண்டும். 250 நாட்டுக் கோழிகள் வளர்க்க தேவையான நிலம், 250 சதுரஅடி சொந்தமாக கிராமப்புறங்களில் இருத்தல் வேண்டும்.
வங்கி கடன் மூலம் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்கள் வங்கி கடன் பெறத் தகுதியுள்ளவராக இருத்தல் வேண்டும். தகுதியுள்ளவர்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், விவரங்களுக்கு தூத்துக்குடி கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநர் (9445032545), கோவில்பட்டி உதவி இயக்குநர் (9445032588), திருச்செந்தூர் உதவி இயக்குநர் (9445001204) ஆகியோரை அணுகலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source:

No comments:

Post a Comment