Monday 8 June 2015

வேளாண் பல்கலை துணைவேந்தர் அழைப்பு; இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட வேண்டும்

திருச்சி : "படித்த இளைஞர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்' என கோவை வேளாண் பல்கலையின் துணைவேந்தர் ராமசாமி பேசினார்.
திருச்சி, அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை சார்பில், "வேளாண்மையில் இளைஞர்களை ஈர்க்கவும், அவர்களை தக்க வைக்கவும்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை முகாம், அன்பில் தர்மலிங்கம் வேளாண் கல்லூரியில் துவங்கியது.சென்னை எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண் ஆராய்ச்சி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் அஜய் கே பரிடா தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் பழனிசாமி, திருச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் தமிழ் களஞ்சியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில், தோட்டக்கலைத்துறை இயக்குனர் சித்திரசேனன் பேசுகையில், ""விஞ்ஞான பூர்வமாக விவசாயம் செய்தால், அதில் தோல்வி என்பதே இருக்காது. தரமுள்ள விதைகளை விவசாயத்தில் பயன்படுத்தினால், அதிக வருவாய் கிடைக்கும். கிருஷ்ணகிரி மாவட்டம், தளி பகுதியில் ரோஜா, லில்லியம் உள்ளிட்ட மலர்களை உற்பத்தி செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக, ரூ.9.70 கோடியில் மாதிரி பண்ணைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,'' என்றார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் ராமசாமி பேசியதாவது:இந்தியாவில், 262 மில்லியன் மெட்ரிக் டன் உணவு உற்பத்தியாகிறது. எனவே, அதை உற்பத்தி செய்யும் விவசாய தொழில் கண்டிப்பாக வருவாய் குறைந்த தொழிலாக இருக்க முடியாது. விவசாய துறையின் முன்னேற்றத்தால், இனி வரும் காலங்களில் உலகில் உள்ள நாடுகளுக்கு, இந்தியாவே உணவு உற்பத்தி செய்து கொடுக்கும் நிலை வரும்.விவசாய தொழிலில் வெற்றி பெற்ற ஒவ்வொருவரும் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். படித்த இளைஞர்கள், கூட்டுத் தொழிலான விவசாயத்தின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். தகவல் தொழில்நுட்பத்தில் பணியாற்றும் பல இளைஞர்கள், 35 வயதுக்கு பின், வேலை இழக்கும் அபாயம் உள்ளது. ஆனால், விவசாயத்தில் அந்த நிலை இல்லை.வேளாண் துறையில், தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், கால்நடை மண்டல இணை இயக்குனர் செல்லச்சாமி, வேளாண் துறை இயக்குனர் ராஜேந்திரன், நவலூர் குட்டப்பட்டு பஞ்சாயத்து தலைவர் அமுதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.பயிற்சி பட்டறையை முன்னிட்டு, திருச்சி மகளிர் தோட்டக்கலைத்துறை கல்லூரிகள் சார்பில், விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள விவசாய பொருட்கள் அடங்கிய, 20 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் வேளாண் தொடர்பான பல பொருட்கள், காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

Source : dhinamalar

No comments:

Post a Comment