Wednesday 17 June 2015

தஞ்சை மாவட்டத்தில் 80,000 ஏக்கர் பயிர்களுக்கு குறுவை தொகுப்பு உதவி திட்டம் 4 கட்டமாக செயல்படுத்த முடிவு

தஞ்சை, : தஞ்சை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பயிர்களுக்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டம் 4 கட்டமாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. திருவையாறு அருகே அள்ளூரில் சண்முகவேல் என்ற விவசாயி நிலத்தில் இயந்திரம் மூலம் குறுவை நடவு பணி நடப்பதை கலெக்டர் சுப்பையன் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் கலெக்டர் சுப்பையன் நிருபர்களிடம் கூறியதாவது: டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை பயன்படுத்தி அதிக பரப்பில் குறுவை சாகுபடி மேற்கொள்ள நடவு இயந்திரம் மூலம் நெல் நடவு பணிகளை மேற்கொள்ள விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.

நடப்பாண்டு தஞ்சை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இதில் இதுவரை 18 ஆயிரம் ஏக்கர் சாகுபடி நடந்துள்ளது. 80 ஆயிரம் ஏக்கருக்கும் குறுவை தொகுப்பு உதவி திட்டம் செயல்படுத்தப்படும். குறுவை தொகுப்பு உதவி திட்டத்தில் இயந்திரங்கள் மூலம் நடவு செய்ய விரும்புவோருக்கு நடவு இயந்திரத்துக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.2,375 வழங்கப்படும். இதேபோல் நுண்ணூட்ட கலவை, உயிர் உரங்கள், இடுபொருட்களுக்கு ஏக்கருக்கு ரூ.315 வழங்கப்படும். தேவையான நிலங்களுக்கு ஜிப்சம் இலவசமாக வழங்கப்படும். இதற்கு தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

குறுவை தொகுப்பு உதவி திட்டம் கடந்த 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒரு கட்டமாகவும், 15ம் தேதி முதல் 30ம் தேதி வரை 2ம் கட்டமாகவும், ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 3ம் கட்டமாகவும், 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை 4ம் கட்டமாக செயல்படுத்தப்படவுள்ளது.  அதன்படி கட்டணமின்றி நடவு இயந்திரம் மூலம் நடவு செய்ய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்துறை அலுவலகங்களிலோ அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களிலோ விண்ணப்பங்களை பெற்று தங்கள் வயல் சாகுபடி விவரங்களை குறிப்பிட்டு விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்களை ஒருங்கிணைத்து அந்தந்த பகுதி வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் மூலம் நடவு இயந்திரம் ஒதுக்கீடு செய்து இலவசமாக நடவுப்பணி மேற்கொள்ளப்படும்.

வேளாண் பொறியியல் துறை மூலம் கும்பகோணம் ஒன்றியத்தில் 40 நடவு இயந்திரங்கள். திருப்பனந்தாள், திருவையாறு ஒன்றியத்தில் தலா 20 இயந்திரங்கள். ஒரத்தநாடு, தஞ்சை, பட்டுக்கோட்டை ஒன்றியங்களில் தலா 10 இயந்திரங்கள். இதர ஒன்றியங்களில் தலா 5 இயந்திரங்கள் ஈடுபடுத்தப்படவுள்ளன. இவை மட்டுமின்றி தனியார் நிறுவனங்கள் மூலம் 100க்கும் மேற்பட்ட நடவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு நடவு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளது. இதுதொடர்பான விவரங்களுக்கு வேளாண் பொறியியல் துறை கண்காணிப்பு பொறியாளரை 04362 235168 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் வயலில் கட்டணமில்லாமல் நடவு பணிகளை மேற்கொண்டு குறுவை சாகுபடியில் அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம் என்றார். மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சொக்கலிங்கம் உடனிருந்தனர். 

1 comment:

  1. Hi,
    I am heartily impressed by your blog and learn more from your article. Thank you so much for sharing with us. I find another blog as like it. If you want to look, visit Nature's Miracle , It’s also more informative.

    Hydroponic Farming in Delhi NCR
    Candy Tomatoes
    Sweet Snack Peppers
    Hydroponic Snack Cucumbers

    ReplyDelete