Wednesday 17 June 2015

ஊட்டி தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக ரூ.15 நிர்ணயம் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தகவல்


ஊட்டி தேயிலை பூங்காவை காண வரும் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவு கட்டணமாக ரூ.15 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேயிலை பூங்கா

நீலகிரி மாவட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தேயிலை விவசாயம் உள்ளது. மேலும், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பசுமை தவழும் தேயிலை செடிகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை சார்பில் சுற்றுலா பயணிகள் தேயிலை குறித்து முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில் தேயிலை பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டது.இதன்படி ஊட்டி- கோத்தகிரி சாலையில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் தேயிலை பூங்கா அமைக்க ரூ.79 லட்சத்து 90 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த தேயிலை பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.

தகவல் பலகை

இந்த பூங்காவில் தேயிலை செடியின் நடுவில் நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் நடந்து சென்றபடி தேயிலை செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கலாம். அப்போது நடைபாதையின் இருபுறமும் இனிமையான இசை ஒலிக்கும். மேலும் நடைபாதை ஓரத்தில் இருக்கைகளும் அமைக்கப்பட்டு உள்ளன. இதுதவிர தேயிலை செடி நீலகிரிக்கு வந்த வரலாறு மற்றும் தேநீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் ஆகியவை குறித்து சுற்றுலா பயணிகள் தெரிந்து கொள்ளும் வகையில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாடி மகிழ சறுக்கு, ஊஞ்சல், சிறிய ராட்டினம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

திறப்பு

மிகவும் அழகான இந்த பூங்காவை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் இந்த பூங்காவை பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் சீனிவாச ரெட்டி, மாவட்ட தோட்டக்கலை துறை இணை இயக்குனர் மணி, துணை இயக்குனர் சிவா, மாவட்ட ஊராட்சி தலைவர் மேனகா, உதவி இயக்குனர்கள் மீராபாய், உமாராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தோட்டக்கலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- ஊட்டியில் கடந்த 1995-ம் ஆண்டு ரோஜா பூங்காவை தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது தேயிலை பூங்காவை தொடங்கி வைத்து உள்ளார். 10 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுக்கும் என்று கருதுகிறோம்.

மாதிரி தேயிலை தொழிற்சாலை

இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தேயிலை தூள் தயாரிக்கப்படும் முறை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இங்கு மாதிரி தேயிலை தொழிற்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் குடிநீர் வசதி, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த பூங்காவிற்கு நுழைவு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.15-ம், சிறியவர்களுக்கு ரூ.10-ம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது தவிர வாகன நிறுத்த கட்டணமாக இருசக்கர வாகனங்களுக்கு ரூ.15-ம், 3 சக்கர வாகனங்களுக்கு ரூ.10-ம், வேன்களுக்கு ரூ.70-ம் பஸ்களுக்கு ரூ.100-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.  

No comments:

Post a Comment