Tuesday 9 June 2015

நெல்லை மாவட்டத்தில் மானியத்துடன் 100 கோழிப் பண்ணைகள்: விண்ணப்பிக்க வேண்டுகோள்


திருநெல்வேலி மாவட்டத்தில், தமிழக அரசு, தேசிய வங்கி மானியத்துடன் 100 கறிக்கோழிப் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது; விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோழிப் பண்ணைத் தொழிலை ஊக்குவிக்கும் வகையில், கோழிப் பண்ணைத் தொகுப்பு மண்டலம் அமைத்து சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி கோழிப் பண்ணைகள் இல்லாத மாவட்டங்களில்   அத்தொழிலை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கறிக்கோழிப் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளவர்களுக்கு, அதற்கான கொட்டகை அமைத்து, உபகரணங்கள் வாங்க ஏற்படும் செலவில் 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. தேசிய வங்கியின் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்து 25 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. எஞ்சியுள்ள 50 சதவீத முதலீட்டுத் தொகையை பயனாளிகள் வங்கிக் கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
ஐந்தாயிரம் கோழிகள் வளர்க்கும் திறன் கொண்டதாக பண்ணை இருக்க வேண்டும். விவசாயிகள், தனிநபர் தொழில் முனைவோர், சுயஉதவிக்குழுவினர் ஆகியோர் இதன் மூலம் பயன்பெறலாம்.
நிகழ் நிதியாண்டில் (2015-16) இம்மாவட்டத்தில் 100 பண்ணைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. பயனாளிகள் மானியம் பெறுவதற்கான விண்ணப்பத்தை கோட்ட அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். ஆட்சியரால் அங்கீகரிக்கப்பட்ட கோழிப் பண்ணை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்கள் பரிந்துரை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கோட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.
கோழிப் பண்ணை அமைக்க விருப்பம் உள்ளோர், கால்நடை பராமரிப்புத் துறையில் திருநெல்வேலி உதவி இயக்குநர் அலுவலகத்தை 0462 2321454, அம்பாசமுத்திரம் உதவி இயக்குநர் அலுவலகத்தை 04634 260070, தென்காசி உதவி இயக்குநர் அலுவலகத்தை 04633 227744 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு இம்மாதம் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைப் பெற்று விண்ணப்பிக்க வேண்டும். கோட்ட உதவி இயக்குநர் அலுவலகத்தில் இருந்தும் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்கலாம் என்றார் அவர்.

Source : Dhinamani

No comments:

Post a Comment