Wednesday 6 May 2015

மாடுகளுக்கு வீடு தேடிச் சென்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி துவக்கம்

சென்னை: தினகரன் செய்தி எதிரொலியால் தமிழகம் முழுவதும் கால்நடைகளுக்கு மருத்துவர்கள் வீடு தேடி சென்று கோமாரி நோய் தடுப்பூசி போட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 10 லட்சத்திற்கும்  மேற்பட்ட கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உள்ளன. கால்நடைகளை தாக்கும் கோமாரி நோயை தடுக்க தடுப்பூசி முறையாக போடாத காரணத்தால் கடந்த 2013ம் ஆண்டு மட்டும்  தமிழகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கறவை மாடுகளும் ஆடுகளும்  இறந்தன. நிலைமையின்  தீவிரத்தை உணர்ந்து கொண்ட கால்நடை பராமரிப்பு துறை கடந்தாண்டு பெரும்பாலான  மாடுகளுக்கு தடுப்பூசியை முறையாக போட்டது. இதனால், கால்நடைகள் உயிரிழப்பு  தவிர்க்கப்பட்டது. இந்த நிலையில், இந்தாண்டு கால்நடை பாராமரிப்பு துறை  சார்பில் கறவை மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி  போடுவதில் அலட்சியம் காட்டி வருவதாக கடந்த 4ம் தேதி தினகரன் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. 

குறிப்பாக, அரசு சார்பில் நடத்தப்படும் முகாம்கள் மாடு வைத்திருப்பவர்களின் வீடுகளில் இருந்து 5 முதல் 10 கிலோ மீட்டர் வரை தூரமாக உள்ளது, பல முகாம்களில் மருந்து இருப்பது இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து, கால்நடை பராமரிப்பு துறை சார்பில் மருத்துவர்கள் காஞ்சிபுரம் மாவட்டம் பவுன்சூர், காஞ்சிபுரம், கூவத்தூர், உத்திரமேரூர் உள்ளிட்ட பல இடங்களில் வீடு வீடாக சென்று கால்நடை தடுப்பூசியை போட்டு வருகின்றனர். இதே போல், விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணி வேகம் எடுத்துள்ளது. 

Source: Dinakaran

No comments:

Post a Comment