Monday 20 April 2015

"ஒருங்கிணைந்து செயல்படும் விவசாயிகளுக்கு ரூ.2 கோடி வரை கடனுதவி'

விவசாயிகள் ஒருங்கிணைந்து மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பில் ஈடுபட்டால் ரூ.2 கோடி வரை கடனுதவி பெறலாம் என பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது.
 தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின்(திண்டுக்கல் பிரிவு) சார்பில், கோழி, ஆடு மற்றும் பால் பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
 பயிற்சி முகாமுக்கு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.பீர்முகமது தலைமை வகித்தார். இதில், மத்திய வேளாண் அமைச்சகத்தின் அங்கீகாரம் பெற்ற வேளாண் விற்பனை மைய இயக்குநர் ஏ.எல்.அழகர்குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மானியம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் தெரிவித்தது:
 கால்நடை வளர்ப்பு மட்டுமின்றி, தோட்டக் கலைப் பயிர்களிலிருந்தும் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், வணிக ரீதியாக விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக 25 முதல் 60 சதவீதம் வரை நபார்டு மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒருங்கிணைந்து செய்யும் தொழில்களுக்கு, 90 சதவீத மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை கடன் பெறலாம். தஞ்சாவூரில் அமைந்துள்ள உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப மையத்தின் மூலம், பால், இறைச்சி, தக்காளி, மாம்பழம் உள்ளிட்ட பொருள்களிலிருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது என்றார் அவர்.
 முகாமில், ஐடிபிஐ வங்கியின் வர்த்தக பிரதிநிதி(மதுரை) முருகன் ராமசாமி, ஆராய்ச்சி மைய உதவி போராசிரியர் கே.விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source:
Dinamani

No comments:

Post a Comment