Wednesday 4 March 2015

அதிக சத்துகளுடன் கூடிய தென்னை நார்க் கழிவு உரம் மண்ணைப் பொன்னாக்கும் வரமாக விவசாயிகளுக்கு கிடைத்துள்ளது என வேளாண் துறையினர் தெரிவித்தனர்.
தென்னை நார்க் கழிவில் எளிதில் சிதைவடையாத லிக்னின், செல்லுலோஸ், கரிமம் ஆகியவை உள்ளன.
தென்னை நார்க் கழிவு நிலத்தில் மக்கும்போது தழைச்சத்தின் அளவு குறைகிறது. ஆய்வுகளின் முடிவில் வீணடிக்கப்படும் தென்னைக் நார்க் கழிவை உயிரியல் முறையில் புளுரோட்டஸ் என்னும் காளான் வித்தைப் பயன்படுத்தி மக்க வைத்து ஊட்டமிகு எருவாக்குவதால் அதன் பயிர்ச் சத்து அளவு அதிகரிக்கப்படுகிறது.

தென்னை நார்க் கழிவை மக்க வைக்கும் முறை:
தேவையான பொருள்கள்: தென்னை நார்க் கழிவு 1 டன். புளுரோட்டஸ் வித்து 5 பாட்டில்கள், யூரியா 5 கிலோ.
செயல்முறைகள்: (முதல் அடுக்கு) நிழலடியில் 5க்கு 3 சதுர மீட்டர் சமதள பரப்பில் 100 கிலோ கழிவுகளை சீராகப் பரப்பி, நன்கு நீர்த் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மீது ஒரு பாட்டில் புளுரோட்டஸ் வித்தை சீராக தூவவும்.
(இரண்டாவது அடுக்கு) அதன் மீது மீண்டும் 100 கிலோ கழிவை சமமாக பரப்பி நன்றாக நீர்த் தெளித்து ஒரு கிலோ யூரியாவை சீராகத் தூவ வேண்டும்.
இவ்வாறு இரண்டு அடுக்குகளை மாற்றி மாற்றி ஒரு மீட்டர் உயரத்துக்கு சீராக அடுக்க வேண்டும்.
அதை கணிசமான ஈரத்துடன் சேர்த்து மக்க வைக்க வேண்டும். சுமார் 30 முதல் 45 நாள்கள் வரை மக்க வைத்தால் நல்ல உரமாக மாறிவிடும்.

தென்னை நார்க் கழிவு பயன்கள்: ஒரு ஏக்கருக்கு 5 டன் தென்னை நார்க் கழிவை இடுவதால் கீழ்கண்ட நன்மைகள் கிடைக்கின்றன.
களிப்பாங்கான மண்ணின் இறுக்கத் தன்மையைக் குறைத்து நீர் கடத்தும் திறனை அதிகரிக்கிறது.
மணற்பாங்கான மண்ணிலும், மானாவரி நிலங்களிலும் நீர்ப்பிடிப்புத் திறனை மேம்படுத்தி மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
களர் நிலங்களிலும் தோல் தொழிற்சாலைக் கழிவினால் பாதித்த நிலங்களிலும் உள்ள தீங்கை நீக்கி விளைச்சலை அதிகரிக்கிறது.
ஊட்டச் சத்துக்கள் மிக்க இந்த எரு அனைத்து வகை நிலங்களிலும் மண்ணை வளமாக்கி விளைச்சலைக் கூட்ட வல்லது.
கழிவுப் பொருள்களை மக்கச் செய்து எருவாக்குவதால் சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்படுகிறது.
எனவே விவசாயிகள் மேற்கண்ட முறையில் தென்னை நார்க் கழிவு உரத்தை தயாரித்து தங்களது மண்ணைப் பொன்னாக்கலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மண்ணைப் பொன்னாக்கும் தென்னை நார்க் கழிவு உரம்: மண்ணைப்-பொன்னாக்கும்-தென்ன/article2698141.ece

No comments:

Post a Comment