Tuesday 3 March 2015

பப்பாளியால் நல்ல பலனுண்டு

உழுபவன் கணக்குப்பார்த்தால் உழக்குகூட மிஞ்சாது என்பது பழமொழி. பருவமழையையே நம்பியுள்ள நம் விவசாயிகளின் நிலை இந்தஅளவில்தான் உள்ளது. முந்தைய காலங்களை போலின்றி, பருவநிலை மாறுபாட்டால் சாகுபடி முறையையும் மாற்ற வேண்டியுள்ளது. இருப்பினும் இயற்கையுடன் நடக்கும் போராட்டத்தில் தோற்கும் பல விவசாயிகள், கடன் வாங்கி சாகுபடி செய்தும் கண்ணீரில் தள்ளாடுவதாய் அமைந்து விடுகிறது.
இந்த போராட்டத்திலும் புத்திசாலி விவசாயிகள் தனி முத்திரை பதித்து விடுகின்றனர். அவர்களில் ஒருவர் பப்பாளி சாகுபடியில் முத்திரை பதித்த கன்னிவாடி மணியக்காரன்பட்டி விவசாயி முத்துக்காளை, 43.
அவர் கூறியதாவது: முக அழகுப்பூச்சு, உடல் உள்உறுப்புகளை சுத்தம் செய்யும் மருந்துப்பொருள் தயாரிப்பில் பப்பாளி பால் மற்றும் பழம் முக்கிய இடம் பெறுகிறது. தனியார் கம்பெனி துணையுடன் பப்பாளி சாகுபடி மேற்கொண்டுள்ளேன். அந்த கம்பெனி நாற்றை எனது நிலத்தில் வளர்த்து வருகிறேன்.
நாற்று ஒன்றுக்கு ரூ.5.30 என நிர்ணயித்து, முதலில் ரூ.2.30 மட்டும் செலுத்தினேன். பப்பாளி பால் மற்றும் பழங்களை சம்பந்தப்பட்ட கம்பெனியினர் வாங்கிக் கொள்கின்றனர். அதற்கான விலையை மீதி தொகைக்கு பிடித்துக் கொள்கின்றனர். நடவுக்குப்பின் 160 நாளில் இருந்து 18 மாதங்கள் வரை பப்பாளி பலனளிக்கும்.
குறைந்தபட்சம் மூன்றடி உயரத்திலேயே பழங்கள் உருவாகின்றன. காய் பருத்து வரும்போது, அவ்வப்போது அதனை கீறி பால் வடித்து, தட்டுகளில் சேகரித்து அவர்களிடம் கொடுப்பேன். ஒருவார இடைவெளியில் மீண்டும் அதே பழத்தில் இருந்து பால் வடிக்கப்படுகிறது. இந்த பாலுக்கு லிட்டர் ரூ.112 என கணக்கிட்டுக் கொள்கின்றனர். இந்த தொகையை கொண்டு நாற்றுகளுக்கான தொகை கழிந்தபின், நமக்கு லாபம் கிடைக்கும்.
ஆறு வாரம் முதல் தண்ணீர், உரம், பராமரிப்பிற்கேற்ப கூடுதலாக பலன் கிடைக்கும். பால் வடிக்கப்பட்ட பின், இறுதியில் பழங்களை கிலோவிற்கு ரூ.3 விலையில் அந்நிறுவனமே எடுத்துக் கொள்கிறது. நாற்றுகள், சாகுபடி தொழில்நுட்பங்கள், பால் எடுக்கும் உபகரணங்கள், களப்பணியாளர் ஆலோசனை போன்றவற்றையும் அந்நிறுவனமே ஏற்கிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்த மரங்கள் மூலம் இரு ஆண்டுகளில் 1500 முதல் 2000 லிட்டர் பாலும், 80 முதல் 100 டன் பழமும் பெறலாம். பால் மூலம் ரூ.84 ஆயிரம், பழங்கள் மூலம் ரூ.1.20லட்சம் கிடைக்கும், என்றார். இதுபற்றி அறிய 97513-09963ல் தொடர்பு கொள்ளலாம்.
-எல்.தாமோதரன்,
கன்னிவாடி.

Source : http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=24136&ncat=7

No comments:

Post a Comment