Monday 2 March 2015

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடக்கம்



அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய் சீசன் தொடங்கி உள்ளது.

முருங்கை பயிர்

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தாலுகாவில் அரவக்குறிச்சி ஒன் றியம், க.பரமத்தி ஒன்றியம், அரவக்குறிச்சி பேரூராட்சி, பள்ளப்பட்டி பேரூராட்சி ஆகிய பகுதிகள் உள்ளன. இதில் அரவக்குறிச்சி ஒன்றியப்பகுதி யில் 20 ஊராட்சிகளும், க.பரமத்தி ஒன்றியப்பகுதியில் 30 ஊராட்சிகளும் உள்ளன. அரவக்குறிச்சி தாலுகா பகுதி பெரும்பாலும் விவசாயத்தையே நம்பி உள்ளது. இப்பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் கிணற்றில் கிடைக்கும் குறைந்த அளவு நீரை கொண்டு முருங்கை பயிரிடுதல் மற்றும் ஆடு, மாடுகள் வளர்த்து வருகின்றனர். அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேல் முருங்கை பயிரிட்டுள்ளனர்.

சீசன் தொடக்கம்

வறட்சியான சூழ்நிலையில் இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. இந்த நிலையில் முருங்கை மரங்கள் பூ பூத்து காய்கள் காய்க்க தொடங்கி உள்ளது. முருங்கையில் செடிமுருங்கை, மரமுருங்கை என இரு வகை உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைக்காய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ ரூ.120-க்கு விலைபோனது. தற்போது சீசன் தொடங்கி விளைச்சல் அதிகமாக உள்ளதால் 1 கிலோ ரூ.40-க்கு விற்பனையாகிறது. இதுபற்றி முருங்கை வியாபாரிகள் கூறுகையில், இப்பகுதியில் தற்போது முருங்கை சீசன் தொடங்கி யுள்ளது. ஜனவரி, டிசம்பர் ஆகிய மாதங்களை தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். வியாபாரிகளாகிய நாங்கள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்து மேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதி விவசாயிகளிடமிருந்து முருங்கைக்காயை வாங்கி பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் விற்பனைக்காக அனுப்பி வருகிறோம் என்றனர்.

மருத்துவ பயன்கள்

சீதபேதி, வயிற்றுப்புண், தலைவலி, வாய்ப்புண் போன்றவைகளுக்கு முருங்கைக்காய் சிறந்த மருந்து. முருங்கைக்காயை வேகவைத்து கொஞ்சம் உப்பு சேர்த்து சாப்பிடலாம். இதை உண்டதும் ஒரு டம்ளர் எருமை மோர் சாப்பிடுவது ஜீரணத்துக்கு உதவுகிறது.

மேலும் வாரம் ஒரு நாள் முருங்கைக்காய் சாப்பிட்டால் வயிற்றுப்பூச்சிகள் நீங்கும், சாம்பார், குழம்பு, காய்கறி வகைகள் இவற்றில் முருங்கைக்காய் சேர்த்து சமைக்கும் போது உடலுக்கு வலிமை சேர்வது மட்டும் இன்றி உடல் குளிர்ச்சி அடையும், ஆண்மை குறையை தவிர்க்கும், புதிய ரத்தம் உண்டாகும், தாது விருத்தியை தரும். மேலும் நரம்புத்தளர்ச்சிக்கு முருங்கை நல்ல மருந்து, முருங்கையை சூப்பாக செய்து குடித்து வந்தால் நரம்பு பலவீனம், கல்லீரல், மண்ணீரல் வீக்கம் குறையும்.

Source : http://www.dailythanthi.com/News/Districts/Karur/2015/02/28234343/Start-of-the-season-in-the-drumstick-aravakkuricci.vpf

1 comment: