Thursday 19 February 2015

மீன் பிடித்தலுக்கு பிந்தைய இழப்பை குறைக்க தீவிர நடவடிக்கை தேவை

பெருகி வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, மீன் பிடித்தலுக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். அதற்கு மீன்களை பதப்படுத்துவதற்கான குளிர்சாதன வசதிகள், சந்தைப்படுத்துதல், தரச் சான்று வழங்கும் முறை ஆகியவற்றை மேம்படுத்த வேண்டும் என கர்நாடக வேளாண், தோட்டப் பயிர் அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் சி. வாசுதேவப்பா கூறினார்.
தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்தில் முதல் பட்டமளிப்பு விழா தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான கே. ரோசய்யா தலைமையில் சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணைவேந்தர் சி. வாசுதேவப்பா பேசியது:
மீன் உற்பத்தியில் 5.4 சதவீத பங்களிப்புடன் இந்தியா உலகில் இரண்டாம் இடம் வகிக்கிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பொருத்தவரை 2013-14 ஆம் ஆண்டு புள்ளி விவரப்படி 1.07 சதவீத பங்களிப்பை மீன்வளத் துறை அளிக்கிறது. 2013-14 ஆம் ஆண்டில் மொத்தம் 1 கோடி டன் மீன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதில் கடல் மீன்களின் பங்களிப்பு 40 லட்சம் டன்கள்
மட்டுமே. வளர்ந்து வரும் மக்கள்தொகை பெருக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால் மீனுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
எனவே, கடல் மீன்பிடித் தொழிலை ஒழுங்குபடுத்துவதும், ஆழ்கடல் மீன் பிடித்தலை மேம்படுத்துவதும் அவசியமாகும்.
மேலும், மீன் பிடித்தலுக்குப் பிந்தைய இழப்பைக் குறைக்க தீவிர நடவடிக்கை அவசியம். குறிப்பாக கடல் மீன் பிடித்தலில் மட்டும் மீன் பிடித்தலுக்குப் பிந்தைய இழப்பு 10 முதல் 25 சதவீதம் வரை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
எனவே, மீன்களைப் பதப்படுத்தி வைப்பதற்கான குளிர்சாதன வசதிகளை மேம்படுத்தித் தருவது, சந்தைப்படுத்துதல், தரச் சான்று வழங்கும் முறை ஆகியவற்றை மேம்படுத்துவது மிக அவசியம்.
தமிழகத்தைப் பொருத்தவரை மீன் உற்பத்தியில் முன்னணி மாநிலமாக உள்ளது. இத் தொழிலை மேம்படுத்த அண்மைக் காலமாக பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.
அதோடு உவர் நீர் மீன் வளர்ப்புத் தொழிலை மேம்படுத்தும் வகையில் கைவிடப்பட்ட கடல் பகுதிகள், நீர்நிலைகளை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கொள்கை முடிவுகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
மாறி வரும் சர்வதேச சூழல், அதிகரித்து வரும் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு நானோ தொழில்நுட்பம், மீன் சுகாதார மேலாண்மை, ஆழ்கடல் மீன்பிடித்தல் உள்ளிட்ட புதியத் துறைகளை தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் மேம்படுத்த வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பாஸ்கரன் மணிமாறன் ஆண்டறிக்கையை வாசித்தார்.
விழாவில் ஆராய்ச்சி பட்டம், முதுநிலை மீன்வள அறிவியல் பட்டம், இளநிலை பட்டங்களைப் பெற்ற 76 பேருக்கு நேரடியாக பட்டச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில் பங்கேற்காமல் மேலும் 23 மாணவ, மாணவிகள் பட்டங்களைப் பெற்றனர்.

Source: மீன்-பிடித்தலுக்கு-பிந்தைய-/article2677396.ece

No comments:

Post a Comment