Wednesday 4 February 2015

துயர் தீர்க்கும் துளசி

பதிவு செய்த நாள்

04பிப்
2015 
00:00
துளசியில் பல ரகங்கள் உள்ளன. எனினும், பொதுவாக அனைத்து ரகங்களும் கோழையை நீக்கும். சரீரத்திற்கு வெப்பம் அளிக்கும். வியர்வையைப் பெருக்கும். காய்ச்சல், நீர் வேட்கை, சுவையின்மை, இருமல், இரைப்பு, சளி முதலான பிணிகளைப் போக்கும். மூக்கிலிருந்து நீரால் ஏற்படுகின்ற அனைத்து தொந்தரவுகளிலிருந்தும் இது விடுதலை அளிக்கும்.
துளசி இலைகளைப் பச்சையாக மென்று தின்பது மிகவும் நல்லது. துளசியை உலர்த்திப் பொடியாக்கி மருந்தாகவும் தயாரிக்கலாம். அரை டீ ஸ்பூன் துளைசித் தூளைத் தேனில் கலந்து ஒரு நாளைக்கு இருவேளை உட்கொண்டு சுகம் பெறலாம். துளசிச் செடியை வளர்ப்பது மிக எளிது. விதைகள் மூலமாக இது விருத்தியாகின்றது. தூள் போன்றுள்ள துளசி விதைகளை பரந்த நிலத்தில் வளர்த்தல் மிகவும் சிக்கனமான விவசாயத் தொழிலாகும். ஒரு எக்டேருக்கு ஏறத்தாழ இருநூறு கிராம் விதைகள் போதுமானது என்பது உரிய விவசாயிகளின் அனுபவ கணக்கு.
எந்த வகை மண்ணிலும் இதைப் பயிரிடலாம். நிலத்தை மூன்று முறை நன்றாக உழுது பண்படுத்தி நேரடியாக விதைகளை விதைத்து அல்லது நாற்றுகளை பிடுங்கி நட்டு சாகுபடி செய்யலாம். வறட்சியைத் தாங்கக் கூடிய பயிர் இது என்பதால் வாரம் ஒருமுறை நீர்ப்பாசனம் செய்தல் நலம். 
விதைத்த பின்பு நூறு நாட்கள் கழித்து தழையைப் பெறுவதற்கு அறுவடை செய்யலாம். இரண்டு மாதங்கள் பிற்பாடு மீண்டும் அறுவடை செய்யலாம். 
துளசிச் செடிகளை ஆடு மாடுகள் சாப்பிடுவதில்லை என்பதால் விவசாயத் தொடர்பான பராமரிப்பு மிக எளிதாக அமையும் எனலாம்.
மருத்துவ முறையிலே துளசி இலைகளை உதிர்த்துப் போட்டு கஷாயம் இறக்கி தேன் கலந்து பருக நெஞ்சிலுள்ள சளி இலகுவாக வெளியேறும். மழைக்காலத்தில் அல்லது பனிக் காலத்தில், பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி டீ அருந்துதல் நன்மை தரும். ""ஐயம், வயிறு உளைச்சல், அஸ்தி சுரம், தாகம், சுர மாந்தம், அரோசகம் போகும் வன் காரச் சூடுள்ள தூய துளசியால்'' என்பது சித்தரின் சித்தம்.
துளசியை மூலப்பொருளாகக் கொண்டு துளசித்தேன், துளசிப் பற்பொடி, துளசி சோப், துளசித் தைலம், துளசி கற்பம், துளசி ட்ரிங்க், துளசி இலைத்தூள் முதலான புதிய படைப்புகள் நடைமுறையில் உள்ளன. டானிக், பெப்பர்மின்ட், சாக்லேட் ஆகியவற்றின் தயாரிப்புகளிலும் இது முக்கிய பங்கு வகிக்கிறது. துளசி ஒரு நறுமணப் பண்டம் (ஸ்பைஸ்) என்றால் அதை நீங்களும் நம்புகின்றீர்களா?
- எஸ்.நாகரத்தினம், விருதுநகர்.

Source: 

No comments:

Post a Comment