Friday 2 January 2015

விஷம் இல்லாத விளைபொருள் பெறலாம்! : இயற்கை விவசாயத்தால் நோயற்ற வாழ்வு

பதிவு செய்த நாள்

02ஜன
2015 
23:58
அன்னுார்: 'இயற்கை விவசாயத்தில், நஞ்சில்லா விளைபொருள் கிடைக்கிறது. அவற்றை உட்கொள்வதால் நோயில்லா வாழ்வு பெறலாம்' என, அன்னுாரில் நடந்த கருத்தரங்கில், தெரிவிக்கப்பட்டது.
அன்னுாரில் இயற்கை விவசாய கருத்தரங்கம் மற்றும் நம்மாழ்வாரின் முதலாம் ஆண்டு நினைவு கூட்டம் நடந்தது. கோவை, 'கிசான் விகாஸ் கேந்திரா' தலைமை விஞ்ஞானி குமார வடிவேலு பேசுகையில்,'இயற்கை விவசாயத்தால் மண் வளம் பெறும். உரம், பூச்சி மருந்து செலவு மிச்சமாகும். மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகும்; விளைபொருள் நஞ்சில்லாமல் இருக்கும்' என்றார். மத்திய அரசின் வேளாண் துறை விருது பெற்ற தாளவாடி விவசாயி சக்திவேல் பேசியதாவது: தோட்டத்தில் மாடுகளின் சாணம், சிறுநீர் பயன்படுத்தி, கரைசல் தயாரிக்கலாம். உரம், பூச்சி மருந்துகளை பயிர்களுக்கு அதிகமாக பயன்படுத்துவதால், விளைபொருட்களில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. சாப்பிடுவோரின் ஆரோக்கியம் கெட்டு, எளிதில் நோய்வாய்ப்படுகின்றனர். இயற்கை விவசாயத்தில் விளைவிக்கப்படும் பொருட்களை உண்பதால் ஆரோக்கியம் மேம்படும். நோய் பாதிப்பிலிருந்து விடுபடலாம். நச்சுத்தன்மை ஏற்படுத்தும் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு, மத்திய அரசு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் மானியம் தருகிறது. ஆனால், நச்சு இல்லாத விளைபொருள் விளைவிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க மானியம் தருவதில்லை. இவ்வாறு, விவசாயி சக்திவேல் பேசினார். காரமடை, 'சிவப்பு ரோஜா' உழவர் மன்ற தலைவர் நந்தகுமார் பேசுகையில், 'சிறுதானியங்களால் உடல் நலம் மேம்படும். கம்பு உணவு குளிர்ச்சி தரும். சாமை அரிசி சாதம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். தினை அரிசி சாதம் கொழுப்பை கரைக்கும். சிறுதானியங்களை இயற்கை முறையில் விளைவித்தால், நல்ல லாபம் பெறலாம்' என்றார். 'பசுமை பேராயம்' தலைவர் சுந்தரம் முன்னிலை வகித்தார். செயலாளர் கோவிந்தராஜன் வரவேற்றார். கவுரவ தலைவர் சுந்தரராமன் தலைமை வகித்தார். இயற்கை விவசாயம் குறித்த கண்காட்சி, புத்தக விற்பனை நடந்தது. குறும்படம் காண்பிக்கப்பட்டது. திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.

Source: 

No comments:

Post a Comment