Tuesday 6 January 2015

சராசரியை விட கூடுதல் மழை; திருப்பூர் மாவட்டத்தில் பதிவு

பதிவு செய்த நாள்

07ஜன
2015 
03:18
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில், கடந்தாண்டு 123.7 மி.மீ., மழை, கூடுதலாக பெய்துள்ளது; இது, ஆண்டு சராசரியை விட அதிகம்.

திருப்பூர் மாவட்டத்தில், 1.98 லட்சம் எக்டேர் பரப்பளவில் விவசாயம் செய்யப்படுகிறது. மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 602.45 மி.மீ., 2011ல், 748.22 மி.மீ., பெய்தது. 2012ல், 365.29; 2013ல், 303.16 மி.மீ., மட்டுமே பெய்தது. கடந்த 2 ஆண்டுகளாக, இயல்பை விட குறைவாக மழை பெய்ததால், வறட்சி ஏற்பட்டது; வேளாண் உற்பத்தி, பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு பாதிக்கப்பட்டது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது.கடந்த 2014ல், மாவட்டத்தில் பசுமை திரும்பியது. ஜன., - பிப்., மாதங்களில் பெய்ய வேண்டிய குளிர்கால மழை பொய்த்தது. இருப்பினும், மார்ச் முதல் மே வரையிலான கோடை மழை, 132.22 மி.மீ., ஆக பதிவானது.

ஜூன் முதல் செப்., வரையிலான தென்மேற்கு பருவ மழை 247.39 மி.மீ., பெய்தது; இது, சராசரியை விட, 122.18 மி.மீ., கூடுதல். கடந்த அக்., முதல் டிச.,வரையிலான வட கிழக்கு பருவ மழை, 346.54 மி.மீ., பெய்தது. இதுவும், சராசரி மழையை விட, 2.54 மி.மீ., அதிகம். மொத்தத்தில், கடந்தாண்டு 726.15 மி.மீ., மழை பதிவானது; இது, ஆண்டு சராசரியை விட, 123.7 மி.மீ., கூடுதல்.வழக்கமாக திருப்பூர் மாவட்டத்தில், வட கிழக்கு பருவ மழை அதிகமாக பெய்யும். ஆண்டு மழைப்பொழிவில் இதன் பங்களிப்பு 57.1 சதவீதமாகவும், தென்மேற்கு பருவ மழை பங்களிப்பு 20.8 சதவீதமாகவும், கோடை மழை பங்களிப்பு 20.6 சதவீதமாகவும் இருக்கும்.கடந்தாண்டு, கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழை, கூடுதல் பங்களிப்பை வழங்கியுள்ளன. வட கிழக்கு பருவ மழை, இயல்பான அளவில் பெய்தது. கோடை மற்றும் தென்மேற்கு பருவ மழையால், கடந்தாண்டு சராசரியை விட கூடுதலாக பெய்துள்ளது.

வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, "இயல்பை விட கூடுதலாக மழை பெய்ததால், வறட்சி மாறி, சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது; நிலத்தடி நீர் மட்டமும் உயர்ந்துள்ளது. இருப்பினும், சரியான நேரத்தில் பருவமழை பெய்யாதது ஏமாற்றமே. ஜன., - ஏப்.,வரை முதல் 4 மாதங்கள் மழையில்லை. ஜூன், ஜூலை மற்றும் நவ., - டிச.,மாதங்களிலும் போதிய மழை பெய்யவில்லை,' என்றனர்.

Source: 

No comments:

Post a Comment