Tuesday 13 January 2015

நீர்மட்டம் சரிகிறது! மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை; குடிநீர், பாசனத்திற்கு நீர் வெளியேற்றம் தொடர்கிறது

பதிவு செய்த நாள்

13ஜன
2015 
07:41
தேனி : நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாதது விவசாயத்திற்காகவும் குடிநீருக்கும் நீர் தொடர்ந்து வெளியேற்றம் என மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது.

தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து போனது. நெல், வாழை, கரும்பு சாகுபடி பாதிக்கப்பட்டது. தென்னைமரங்கள் காய்ந்து வறட்சி நிலவியது. மேய்ச்சலுக்கு கூட தீவனம் கிடைக்காமல் கால்நடைகளை விற்கும் நிலை ஏற்பட்டது. கோடையில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இந்நிலையில் சென்ற ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாவிட்டாலும் ஏமாற்றம் அளிக்காமல் இருந்தது. வடகிழக்கு பருவமழை, மேற்கு தொடர்ச்சி மலையில் கொட்டிதீர்த்தன் விளைவாக அணைகள் நிரம்பின. பெரும்பாலான கண்மாய்கள் நிரம்பியதால், நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து மானாவாரி விவசாயம் நடந்து வருகிறது.

டிசம்பர் வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதுடன் அவ்வப்போது மழை பெய்ததால் நீர் வெளியேற்றம் இருந்தாலும் அணைகளில் நீர் மட்டம் சீராக இருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக முற்றிலும் மழை இல்லை. பனி காலம் துவங்கிவிட்டது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து குறைந்துள்ளது. அதே நேரத்தில் அணைகளில் இருந்து நீர் தொடர்ந்து வெளியேற்றப்படுகிறது. இதனால் அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில்,""வைகை அணையில் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நீர் வரத்து குறைந்ததால் இனி பெரியாறு அணை நீர் மட்டத்தை நம்பி தான் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் இரண்டாம் போகத்திற்கு சிக்கல் இல்லை. இருந்தாலும் கோடை காலம் குடிநீர் தேவை, விவசாயம் உள்ளிட்ட பணிகள் இருப்பதால் நீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர், என்றனர்.

அணைகளின் நீர் மட்டம்
* வைகை அணை: 39.27 அடி, (மொத்தம் 71 அடி) நீர் வெளியேற்றம் 1660 கனஅடி.
* மஞ்சளாறு அணை: 43.55 அடி (மொத்தம் 57) நீர் வெளியேற்றம் 80 கன அடி
* சோத்துப்பாறை அணை: 121.19 அடி(மொத்தம் 126.28) நீர்வெளியேற்றம் 0.5 கனஅடி.
* சண்முகா நதி அணை: 30.5 அடி (மொத்தம் 52 ) வெளியேற்றம் 14 கனஅடி

No comments:

Post a Comment