Monday 19 January 2015

பால் வளத்தைப் பெருக்கும் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல்!

First Published : 08 January 2015 12:14 AM IST
பசுக்கள் வளர்க்கும் விவசாயிகள் கம்பி நேப்பியர் ஒட்டுப்புல் என அழைக்கப்படும் சி.என். 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதால் பால் உற்பத்தியை எளிதாகப் பெருக்கலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட இந்த ரகம், குறைந்த பரப்பில் அதிக மகசூல் தரும் புல் ரகமாகும்.
இந்த தீவனப் பயிரை உற்பத்தி செய்வதால் குறைந்த இடத்தில் அதிக பசுந்தீவன புல்லை உற்பத்தி செய்து பால் உற்பத்தியைப் பெருக்கலாம் என காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்துள்ளார்.
அவரது தகவல்கள்: கம்பு நேப்பியர் ஒட்டுப்புல், அதிகத் தூர்களுடன் வளரக்கூடிய ஒரு பல்லாண்டு தீவனப் பயிராகும். தண்டுகள் மிகவும் மிருதுவான, இனிப்பான, சாறு நிறைந்த, குறைந்த நார்ச்சத்தைக் கொண்டவை.
அதிக தூர்களுடன் (செடிக்கு 30 முதல் 35 தூர்கள்) சாயாத் தன்மை கொண்டது. அகலமான, மிருதுவான இலைகள் அதிக இலை தண்டு விகிதம் கொண்டவை.
இவ்வகை பயிரை எளிதில் பூச்சிகள், நோய்கள் தாக்காது. அதிக உலர் தீவன மகசூல், புரதச்சத்து கொண்டவை. ஆண்டுக்கு ஏழு முறை அறுவடை செய்யலாம். இதனால் ஏக்கருக்கு 350 முதல் 400 டன் அளவுக்கு மகசூல் பெறலாம்.

பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்: கால்நடைகளுக்குப் பசுந்தீவனப் புற்கள் கொடுப்பதால் பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ எனும் உயிர்ச்சத்து கிடைக்க வழிவகை ஏற்படுகிறது. கால்நடைகளின் கண்பார்வை, சுவாச மண்டலத்தின் செயல்பாடுகள் மேம்படுகிறது. மேலும், கால்நடைகளின் கரு உருவாவதற்கும், உருவான கருவைத் தக்க வைப்பதற்கும் பசுந்தீவனப் புற்கள் வழிவகை செய்கின்றன.

சாகுபடி தொழில்நுட்பம்: ஆண்டு முழுவதும் எல்லா வகை மண் வகைகளிலும் அனைத்து மாவட்டங்களிலும் இந்தப் புல்லைப் பயிரிடலாம். நிலத்தை இரும்புக் கலப்பையைக் கொண்டு 2 அல்லது 3 முறை நன்கு உழவு செய்ய வேண்டும். நிலத்தைப் பண்படுத்திய பிறகு 60 செ.மீ. இடைவெளியில் பாத்திகள் அமைக்க வேண்டும்.
மண் பரிசோதனை செய்து மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு உரங்களை இட வேண்டும். மண் பரிசோதனை செய்யாவிட்டால், 1 ஏக்கருக்கு அடியுரமாக 25 டன் மக்கிய தொழுஉரம், 75 கிலோ தழைச்சத்தை அடியுரமாக இடுவதால் மகசூலை நிலை நிறுத்தலாம்.
பாத்திகள் அமைக்கப்பட்ட நிலத்தில் நன்கு நீர்ப் பாய்ச்சிய பின் தண்டுக்கரணையை 60-க்கும் 50 செ.மீ. இடைவெளியில் செங்குத்தாக நடவு செய்ய வேண்டும்.
இவ்வாறு நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு 33 ஆயிரத்து 333 கரணைகள் தேவைப்படும். கரணை நட்ட 3ஆவது நாளில் உயிர் நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
பிறகு 10 நாள்களுக்கு 1 முறை நீர்ப்பாசனம் கொடுக்க வேண்டும்.
கரணை நட்ட 20ஆவது நாள் ஒரு கைக்களை எடுக்க வேண்டும். நடவுக்குப் பின் 75 முதல் 80 நாள்களில் முதல் அறுவடையும், அடுத்தடுத்து 45 நாள்களிலும் தீவனப் பயிர்களை அறுவடை செய்யலாம்.
இவ்வாறு சாகுபடி மேற்கொண்டால், 1 ஹெக்டேரில் 1 ஆண்டுக்கு 7 அறுவடைகளில் 350 முதல் 400 டன் பசுந்தீவன மகசூல் உற்பத்தி செய்யலாம். எனவே கறவைமாடு வளர்க்கும் விவசாயிகள் குறைந்தபட்ச நிலத்திலாவது, கோ (சிஎன்) 4 ரக புல்லை உற்பத்தி செய்து, கால்நடைகளுக்கு கொடுப்பதன் மூலம் பால் உற்பத்தியை எளிதாக பெருக்கலாம். மேலும் நகர்புற அருகில் உள்ள விவசாயிகள் இப்புல்லை உற்பத்தி செய்து, பசும்புல்லை, ஒரு கிலோ ரூ. 3 வரையில் விற்பனை செய்யலாம். இந்தப் புல்லில் தண்டுக்கரணை உற்பத்தி செய்து விற்பதன் மூலம் அதிக வருவாயை ஈட்டலாம்.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியரை 98844 02613 என்ற கைப்பேசி எண்ணிலோ, 044 - 2745 2371 என்ற தரைவழி தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்றார் முருகன்.

Source: பால்-வளத்தைப்-பெருக்கும்-கம/article2608498.ece

No comments:

Post a Comment