Sunday 4 January 2015

மாதிரி தோட்டம் ! : மாவட்டத்தில் முதல்முறையாக காய்கனிகளின் : விவசாயிகள் விளைச்சலை நேரடியாக பார்க்க முடியும்

பதிவு செய்த நாள்

04ஜன
2015 
21:06
காஞ்சிபுரம்: காய்கனி விதைகளின் வீரியத்தையும், தன்மையையும் விளைச்சல் மூலமாக விவசாயிகள் நேரடியாக கண்டறிய, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்முறையாக, மாதிரி தோட்டத்தை தோட்டக்கலை துறை அமைத்துள்ளது.தமிழகத்தில், விவசாய துறையின் முக்கிய அங்கமாக தோட்டக்கலை துறை விளங்கி வருகிறது. நெல், கரும்பு, பருத்தி போன்றவை மட்டுமல்லாமல், காய்கனிகளையும் விளைவித்து விவசாயிகள் முன்னேற, தோட்டக்கலை துறை பெரிதும் உதவி வருகிறது.
தோட்டக்கலை துறை முடிவு
விவசாயிகளுக்கு, அபிவிருத்தி திட்டத்தின் கீழ், வெண்டை, கத்திரி, தக்காளி மற்றும் பழ வகைகளின் விதைகளை, தோட்டக்கலை துறை மானிய விலையில் வழங்குவது வழக்கம். ஒரு சில வீரிய விதைகளை பயன்படுத்தி, லாபம் அடையவும் அறிவுரை வழங்கி வருகிறது.
அவ்வாறு அறிவுறுத்தப்பட்டு விதைக்கப்படும் காய்கனிகளின் முளைப்பு திறனை, விளைந்த பிறகே விவசாயிகள் தெரிந்து கொள்ளும் சூழல் இருந்து வந்தது. இதனால், ஒரு சில விதைகள் மூலம் அதிக விளைச்சல் கிடைக்கப் பெறாமல் போவதற்கும் வாய்ப்பு இருந்தது. இதை தவிர்க்கவே, காய்கனிகளின் விளைச்சலை மாதிரி தோட்டம் மூலம் விவசாயிகளுக்கு காண்பிக்க, மாவட்ட தோட்டக்கலை துறை முடிவு செய்தது.இந்த மாதிரி தோட்டம் மூலம் சொட்டு நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவம்; துறை மூலம் வழங்கப்படும் விதைகளின் விளைச்சல் திறன் ஆகியவற்றை விவசாயிகள் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்.அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துறையின் பண்ணைகளில் மாதிரி தோட்டத்தை அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. ஓரளவு ஏற்ற தட்பவெப்ப சூழலுடன் உள்ள ஆத்துார் மற்றும் விச்சாந்தாங்கல் பண்ணைகளில், வெண்டையின் மாதிரி தோட்டங்கள் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரி தோட்டங்களை, விவசாயிகள் நேரடியாக பார்த்து, அதன் விளைச்சலை தெரிந்து கொள்ளலாம் என, தோட்டக்கலை துறை அறிவித்துள்ளது.தற்போது, வெண்டை விதைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள நிலத்தில், மிளகாய், தர்பூசணி ஆகியவை விரைவில் பயிட, தேட்டக்கலை துறை திட்டமிட்டு உள்ளது. எனவே, இந்த மாதிரி தோட்டத்தை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள, துறை அதிகாரிகள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
விவசாயிகளுக்கு வேண்டுகோள்காஞ்சிபுரம் மாவட்ட தோட்டக்கலை துறையின் துணை இயக்குனர் (பொறுப்பு) கோல்டி பிரேமாவதி கூறியதாவது: மாவட்டத்தில் ஆத்துார், விச்சாந்தாங்கல் ஆகிய இரண்டு பண்ணைகளில் இந்த மாதிரி தோட்டங்கள் அமைத்துள்ளோம்.
மற்ற மூன்று பண்ணைகளில் மாதிரி பண்ணைகள் அமைக்க ஏதுவான தட்பவெப்ப நிலை இருந்தால், அந்த பண்ணைகளிலும் ஏற்படுத்தப்படும். காய்கனிகளின் விளைச்சல், சொட்டு நீர்ப்பாசனத்தின் முக்கியத்துவத்தை இந்த மாதிரி தோட்டம் மூலம் விவசாயிகள் தெரிந்து கொள்ளலாம். எனவே, இந்த தோட்டத்தை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Source: 

No comments:

Post a Comment