Wednesday 7 January 2015

நவீன தொழில்நுட்பம்

பதிவு செய்த நாள்

07ஜன
2015 
00:00
திசு வளர்ப்பு வாழை சாகுபடி நுட்பங்கள் : திசு வளர்ப்பு வாழை என்பது தேர்வு செய்யப்பட்ட தாய் மரத்திலிருந்து அதன் பண்புகளை ஒத்த சேய் அல்லது மிகச் சிறிய பக்கக்கன்றுகளாய் பிரித்தெடுத்து, அதற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஈரப்பதம், ஒளி, வெப்பநிலை ஆகியவற்றை தேவையான அளவில் கொடுத்து, ஆய்வக சூழலில் அதிக அளவிலான கன்றுகளை உருவாக்கும் முறைக்கு திசு வளர்ப்பு முறை என்றும் அக்கன்று திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள் என்றும் அழைக்கப்படுகிறது.
திசு வளர்ப்பு முறையில் ஒரு வாழைக்கன்றிலிருந்து குறைந்த பட்சமாக 500-700 கன்றுகளை உற்பத்தி செய்ய முடியும். திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்படும் கன்றுகள் நச்சுக்கிருமி மற்றும் மரபணு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அரசு தரச்சான்றிதழ் வழங்கப்படுவதால் விவசாயிகள் நோயற்ற கன்றுகளைப் பெற முடியும். வாழைக்கட்டைகளுடன் ஒப்பிடும் போது 20-30 நாட்கள் முன்னதாகவே அறுவடைக்கு வந்து விடும். திசு வளர்ப்பு வாழையின் அதிக விலை காரணமாக சிறு மற்றும் குறு விவசாயிகளிடையே இதன் பயன்பாடு சற்று குறைந்து காணப்படுகிறது.
நாற்றங்காலில் பராமரிப்பு : முப்பது நாட்கள் வரை முதல்நிலை பக்குவப்படுத்தப்பட்ட கன்றுகளை குறைந்தது ஒன்று முதல் ஒன்றரை மாதங்கள். இரண்டாம் நிலை நாற்றங்காலில் பராமரிப்பது அவசியம். முதலில் செம்மண், மணல், தொழுஉரம் அல்லது மண்புழு உரம் 1:1:1 என்ற விகிதத்தில் கலந்து அத்துடன் 100 கிலோ தொட்டிமண் கலவைக்கு 1/2 கிலோ என்ற விகிதத்தில் பியூரடான் குருணை மருந்தினை கலந்து கிருமி நாசினியான பார்மால்டிஹைடு 100 மிலி அளவில் தெளித்து இந்த தொட்டிக் கலவையை உபரி தண்ணீர் வெளியேறுவதற்கு போதுமான துவாரங்கள் ஏற்படுத்தப்பட்ட 150 திட அளவுடைய கருப்பு நிற பாலிதீன் பைகளில் நிரப்பப்பட வேண்டும். பாலிதீன் பைகளில் தண்ணீர் ஊற்றி ஈரம் செய்த பிறகு மண்ணில் நடுவே சிறிய துளையினை ஏற்படுத்தி கன்றுகளின் வேர்ப்பகுதிக்கு பாதிப்பு இல்லாதவாறு நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3ம் நாள் உயிர் நீர் ஊற்ற வேண்டும். ஊட்டச்சத்து மிக்க 19:19:19 என்ற உரக்கலவையை கன்று ஒன்றுக்கு 50-100 மிலி வீதம் ஊற்ற வேண்டும். திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள் 45-60 நாட்களில் முதிர்ச்சி பெற்று நடவு செய்ய தயாராகிறது.
நடவும் பராமரித்தலும் : கன்றுகளைத் தேர்வு செய்யும் போது குறைந்தது 20-30 வளர்ச்சியடைந்த வேர்கள் இருப்பது அவசியம். கன்றுகளின் வேர்ப்பகுதியைத் தாக்கும் நுண்கிருமிகளான எர்வீனியா மற்றும் நூற்புழுக்களின் தாக்கம் பற்றி ஆய்வு செய்து, வளர்ச்சியில் வேறுபட்ட கன்றுகளை கண்டறிந்து தரமற்ற கன்றுகளை நீக்குவதன் மூலம் நோய்கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம்.
நாற்றங்காலில் 45-60 நாட்கள் பராமரிக்கப்பட்ட கன்றுகள் விளைநிலத்தில் நடவு செய்யும் பருவத்தை அடைகின்றன. வயல்வெளியில் நடவு செய்வதாக இருப்பின் 1/4 அடி ஆழமும், 1 அடி அகலமும் கொண்ட குழிகள் தோண்டி, மாலை நேரங்களில் நடவு செய்ய வேண்டும். பாலிதீன் பையைக் கிழித்து வேர்களுக்கு எவ்வித சேதமும் இல்லாமல் குழியின் நடுவே வைத்து, சுற்றிலும் தொழு உரம், நுண்ணுயிர் உரத்தினை தாய் மண்ணுடன் கலந்து குழியை நிரப்பி நன்கு நீர் விட வேண்டும். கன்றுகளை நடவு செய்த 3ம் நாள் 10 கிராம் கார்போ பியூரான் குருணை மருந்தும் 500 மிலி 0.5 சதம் எமிசான் கரைசல் கொடுப்பதன் மூலம் நூற்புழு மற்றும் வேர் அழுகல் நோயினைக் கட்டுப்படுத்த முடியும். கோடைகாலங்களில் கன்றுகளை நடவு செய்யும் பொழுது பனை அல்லது தென்னை ஓலையைக் கொண்டு நிழல் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியம்.
கன்றுகளுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை 7 பாகங்களாக பிரித்து, ஒன்றாம் மாதத்திலிருந்து, மாதத்திற்கு ஒருமுறையே இட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக மகசூலை பெற முடியும். விவசாயிகள் திசு வளர்ப்பில் அடர் நடவு முறை மற்றும் நீர்வழி உரமிடுதல் போன்ற உயர் தொழில்நுட்பங்களைக் கடைப்பிடிப்பது அதிக லாபம் பெறலாம்.
தகவல் : இயக்குநர், தேசிய வாழை ஆராய்ச்சி மையம், தோகைமலை ரோடு, தயனூர் 
அஞ்சல், திருச்சிராப்பள்ளி-620 102. போன் : 94435 90188 (முனைவர் எம்.எஸ்.சரஸ்வதி).
- டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: 

No comments:

Post a Comment