Monday 19 January 2015

குருத்துப் பூச்சியில் இருந்து நெல் பயிரை காப்பது எப்படி

First Published : 08 January 2015 12:15 AM IST
தற்போதைய பருவத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதலால், நெல் பயிர்கள் அதிகளவில் சேதம் ஏற்படும் வாய்ப்புள்ளதால், அதற்கான மேலாண்மை முறைகளை விவசாயிகள் கையாள வேண்டும் என திரூர் நெல் ஆராய்ச்சி நிலையப் பேராசிரியரும், தலைவருமான அகிலா அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் குருத்துப் பூச்சியின் தாக்குதல் ஜனவரி மாதத்தில் அதிக அளவில் இருக்கும். இதனால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கும். எனவே விவசாயிகள் கவனத்துடன் தங்களது பயிர்களைக் கண்காணித்து குருத்துப் பூச்சி மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தாக்குதல் அறிகுறிகள்: இளம் புழுக்கள் இளம் பயிரின் தண்டில் துளையிட்டு உள் சென்று அதன் அடிபாகத்தில் இருந்து கொண்டு உள் பகுதியைக் கடித்து உண்பதால் இளம் பயிரின் நடுக்குருத்து வாடிக் காய்ந்து விடும்.
பூக்கும் பருவத்தில் கதிர் காய்ந்து மணி பிடிக்காமல் வெண்ணிறக் கதிர்களாக மாறும். இது வெண்கதிர் சேதம் ஆகும்.
வாடியக் குருத்து அல்லது வெண் கதிரைப் பிடித்து இழுத்தால் எளிதில் வந்து விடும். பொருளாதார சேத நிலை ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டைக் குவியல்கள் ஆகும். காய்ந்த நடுக்குருத்து 10 சதவீதமும், வெண்கதிர் 2 சதவீதமும் ஏற்படும்.
மேலாண்மை முறைகள்: அறுவடை செய்தபின் தாள்களை மடக்கி உழுவதன் மூலம் புழுக்களையும், கூட்டுப் புழுக்களையும் அழிக்கலாம்.
நடுவதற்கு முன் நாற்றுக்களின் நுனியைக் கிள்ளி முட்டைக் குவியல்களை அழிக்க வேண்டும்.
மண் பரிசோதனை செய்து வேளாண் அதிகாரிகளின் ஆலோசனையின்பேரில் தழைச் சத்து உரம் இட வேண்டும்.
மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை வயலில் விளக்குப் பொறி அமைக்க வேண்டும்.
ஒரு ஹெக்டேருக்கு 12 வீதம் இனக் கவர்ச்சிப் பொறி அமைக்க வேண்டும். டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம் என்னும் முட்டை ஒட்டுண்ணியை ஒரு வார இடைவெளியில் மூன்று முறை வெளியிடவும்.
பூச்சித் தாக்குதல் பொருளாதார சேத நிலையை அடையும் போது கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லிகளுள் ஏதேனும் ஒன்றை ஒரு ஹெக்டேருக்குத் தெளிக்க வேண்டும்.
மேலும் ப்ளுபென்டிமைடு 39.35 எஸ்.சி 50 மில்லி லிட்டர், கார்டாப்ஹைட்ரோ குளோரைடு 50 எஸ்பி -1000 மில்லி லிட்டர், குளோரன்டிரினிலிப் ரோல் 18.5 எஸ்.சி 150 மில்லி லிட்டர், டிரை அசோபாஸ் 40 625 மில்லி லிட்டர், பிப்ரோனில் 5 எஸ்.சி 1000 மில்லி லிட்டர் ஆகியவை இட வேண்டும்.

Source: குருத்துப்-பூச்சியில்-இருந/article2608509.ece

No comments:

Post a Comment