Monday 19 January 2015

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் இணையவேண்டும்

கோவை, : தமிழகத்தில் விவசாயத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் மற்றும் எதிர்பாராத இடர்பாடுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் தமிழக அரசு உழவர் பாதுகாப்புத் திட்டம் என்ற சமூகப்பாதுகாப்பு திட்டத்தை கடந்த 2005ம் ஆண்டு அறிவித்தது.
இத்திட்டத்தின் படி இதில் உறுப்பினர்களாக இருப்பவர்களுக்கு, திருமண உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, மகப்பேறு உதவித்தொகை, விபத்து மரணம் மற்றும் காயம் ஆகியவற்றிற்கு நிதி உதவி வழங்கப்படும். மேலும் இத்திட்ட உறுப்பினர்களை சார்ந்தவர்களுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற சிறு குறு விவசாயிகள் நன்செய் நிலம் என்றால் 2.5 ஏக்கர் அல்லது புன் செய் நிலம் என்றால் 5 ஏக்கர் நிலம் வைத்திருக்க வேண்டும். இந்நிலத்தில் நேரடியாகவோ அல்லது குத்தகைக்கோ விவசாயம் மேற்கொள்ளும் 18 வயது முதல் 60 வரை உள்ள அனைத்து விவசாயிகளும், அவர்களது குடும்ப உறுப்பினர்களும் இனைந்து கொள்ளலாம். மேலும் விவசாயம் சார்ந்த தொழில்களான தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பயிர் வளர்த்தல், புல் வளர்த்தல், விவசாயம் சார்ந்த தொழில்கள், பல் பண்ணை, மீன் வளர்ப்பு கால் நடை வளர்ப்பு, மரங்கள் வளர்ப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபடும் விவசாயிகளும், இதில் வேலைசெய்யும் விவசாய தொழிலாளர்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம். 
இது குறித்து சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரி கூறுகையில், 
கோவை மாவட்டத்தை பொருத்தவரை உழவர் பாதுகாப்பு திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள விவசாயிகள் முயல்வதில்லை. இத்திட்டத்தின் கீழ் விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களின் இயற்கை மரணத்திற்கு ரூ.10 ஆயிரமும், விபத்தில் மரணமடைந்தால் ரூ.1 லட்சமும், விபத்தில் இரண்டு கைகள் அல்லது கால்கள் இழந்தால் ரூ. 1 லட்சமும், ஒரு கை, கால் இழந்தால் ரூ.50 ஆயிரமும், வழங்கப்படுகிறது. 
மேலும் ஈமச்சடங்கிற்கு ரூ.2,500 வழங்கப்படுகிறது. இத்தகைய உதவித் தொகைகளை பெறுவதற்கு விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை, இதில் தங்களையும் மற்றும் குடும்ப உறுப்பினர்களையும் இணைத்துக்கொள்ள அந்தந்த பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் சென்று விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது. எனவே விவசாயிகள் அனைவரும் இத்திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். 
தற்போது வரை கோவை மாவட்டத்தில் 3.63 லட்சம் பேர் மட்டுமே இத்திட்டத்தில் இணைந்துள்ளனர் என்றார்.

Source: 

No comments:

Post a Comment