Sunday 4 January 2015

தேங்காய் உலர் களங்களில் கந்தகம் பயன்பாடு: காங்கயம் பகுதியில் அமில மழை பெய்ய வாய்ப்பு

காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் உலர் களங்களில் கந்தகம் பயன்படுத்தப்படுவதால், இப்பகுதியில் அமில மழை பொழியும் வாய்ப்புள்ளதாக மாணவர்களின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கடந்த ஒரு மாதமாக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், பின்னர் தேசிய அளவிலும் நடைபெற்றது. இந்த மாநாட்டில், காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த 8-ஆம் வகுப்பு மாணவர்கள் பி.அருண்பிரசாத், வி.கோகுல், எம்.ஜெயவர்ஷினி, டி.என்.கிருத்திகா, எம்.அழகுசுஜா ஆகியோர் "தேங்காய் களங்களில் சல்பர் (கந்தகம்) பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்' என்னும் தலைப்பில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக காங்கயம் பகுதியில் உள்ள தேங்காய் உலர் களங்களில் ஆய்வு மேற்கொண்டும், அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், வேளாண்மைத் துறை அதிகாரிகள், இப்பகுதி மருத்துவர்கள் உள்ளிட்டவர்களைச் சந்தித்தும், தகவல்கள் சேகரித்து ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். இந்தக் கட்டுரை மாவட்ட அளவிலும், பின்னர் மாநில அளவிலும் தேர்வு பெற்று, கடந்த வாரம் பெங்களூரில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும் ஆய்வுகள் கட்டுரையை சமர்ப்பித்து பாராட்டுப் பெற்று வந்துள்ளனர்.
இந்த ஆய்வு குறித்து மாணவர்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:
காங்கயம், வெள்ளகோவில், சென்னிமலை ஆகிய பகுதிகளில் சுமார் 2000 தேங்காய் உலர் களங்கள் உள்ளன. காங்கயம் பகுதியில் மட்டும் சுமார் 1000 களங்கள் உள்ளன. இந்தக் களங்களில் தேங்காய்களை வாங்கி உடைத்து, அதன் பருப்பை உலர வைத்து விற்பனை செய்கின்றனர்.
இந்தத் தேங்காய் பருப்புகளில் (கொப்பரை) பூஞ்சை பிடிக்காமல் இருப்பதற்கும், தேங்காய் எண்ணெய் நல்ல நிறத்தில் இருப்பதற்காகவும் கந்தகத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதில், தேங்காயில் இருந்து பருப்பு எடுத்ததும், அவைகளைக் குவித்து வைத்து, அந்தப் பருப்பில் கந்தகத்தை புகை போட்டு, காற்றுப் புகாத வண்ணம் தார்ப்பாய் போட்டு மூடி விடுகின்றனர். பின்னர், களத்தில் உலர வைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால், தேங்காய் பருப்பு உலர்ந்து கெட்டுப் போகாமல் இருக்கும். ஆனால், இதில் பயன்படுத்தப்படும் கந்தகம்தான் பல விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால், அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், அதனைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கும் ஆஸ்துமா, கண் எரிச்சல் உள்ளிட்ட தீராத நோய்களை தொடர்ந்து உண்டாக்கி வருகிறது.
கந்தகம் போட்டு மூடப்பட்டிருக்கும் தேங்காய் பருப்பு குவியல்களில் தார்ப்பாய் விலகும்போது, அதிலிருந்த விஷக்காற்று வெளியேறி சல்பர் டை ஆக்ûஸடாக மாறி மேகங்களில் கலப்பதால், இப்பகுதியில் அமில மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிந்து கொண்டோம்.
தமிழ்நாட்டில் இந்த சல்பர் கலந்த தேங்காய் பருப்புகள் எண்ணெய் எடுப்பதற்கு பயன்படுகின்றன. ஆனால், வட மாநிலங்களில் இந்தப் பருப்புகள் கேக், ஐஸ்கிரீம் உள்ளிட்ட நேரடி உணவுப் பொருள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. தலையில் சீக்கிரம் தலைமுடி கொட்டிப் போவதற்கு, இந்த சல்பர் தேங்காய் எண்ணையும் ஒரு காரணம், என்றனர்.

புற்றுநோய் பாதித்தவர்களில் 4 பேரில் ஒருவர் காங்கயம்வாசி

இதுகுறித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் திருப்பூர் மாவட்டச் செயலர் வி.சங்கரகோபால் கூறியதாவது:
இந்த கந்தகப் புகை, விஷக் காற்றின் காரணமாக கடந்த வருடத்தில் மட்டும் காங்கயம் பகுதியில் அதிகமானோர் புற்றுநோயால் இறந்திருக்கின்றனர். வேலூர், அடையாறு, புதுச்சேரி, கோவை உள்ளிட்ட புற்றுநோய் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 4-இல் ஒருவர் காங்கயம் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கிறார்.
இந்த சல்பர் கலந்த தேங்காய் பருப்பு காரணமாக, காங்கயம் பகுதியில் தயாரிக்கப்படும் தேங்காய் எண்ணையை கேரளாவில் 3 கட்ட கடுமையான சோதனைகளுக்குப் பிறகே வியாபாரிகள் பெற்றுச் செல்கின்றனர். தமிழ்நாட்டில் அப்படி எந்தச் சோதனையும் நடைபெறுவதாகத் தெரியவில்லை.
மழைக் காலத்தில் பருப்பு கெட்டுப் போகாமல் இருப்பதற்காக போடப்பட்டு வந்த சல்பர், இப்போது எல்லா நாள்களிலுமே போடப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு, காங்கயம் பகுதியில் இயங்கி வரும் தேங்காய் உலர் களங்களை முறைப்படுத்த வேண்டும், என்றார்.

Source: தேங்காய்-உலர்-களங்களில்-கந்/article2604156.ece

No comments:

Post a Comment