Friday 23 January 2015

கத்தரி பயிரிட்டால் அதிக லாபம் பெறலாம்!

விவசாயிகள் தற்போதைய பருவத்துக்கு ஏற்ற தோட்டப் பயிரான கத்தரிக்காயை சாகுபடி செய்து அதிக லாபம் பெறலாம் என வேளாண் துறையினர் யோசனை தெரிவித்தனர்.
இதற்கான வழிமுறைகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். அதன் விவரம்:
பயிரிடும் காலம்: நாள் தோறும் மக்களின் பயன்பாட்டில் அதிகம் உள்ள காய் கத்தரி. இதை டிசம்பர், ஜனவரி மாதத்தில் தொடங்கி மே வரை பயரிடலாம்.
மண்ணின் தன்மை: நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த வண்டல் மண் அல்லது களிமண் கலந்த வண்டல் மண் கத்தரி பயிரிட ஏற்றதாகும்.
விதை நேர்த்தி: ஒரு ஹெக்டேருக்கு 200 கிராம் வீதம் விதை நேர்த்தி செய்ய வேண்டும். டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் வீதம் கலக்க வேண்டும். அசோல் பைரில்லம், பாஸ்போபேக்டீரியா ஒவ்வொன்றையும் 100 கிராம் வீதம் கலந்து நிழலில் அரைமணி நேரம் வைக்க வேண்டும்.
இடைவெளி, செடி எண்ணிக்கை: பொதுவாக கத்தரி ரகத்தின் தன்மையைப் பொறுத்து இடைவெளி, செடியின் எண்ணிக்கை மாறுபடும். மிதமான வளர்ச்சி உள்ள ரகங்களை 4 அடி அகலமுள்ள மேட்டுப் பாத்தியில் ரெட்டை வரிசை முறையில் 60 ல 60 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
அதிக வளர்ச்சியுள்ள ரகங்களை உயர் பாத்தியில் ஒரு வரிசையில் ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் 45 சென்டி மீட்டர் இடைவெளியில் நட வேண்டும்.
நடவு முறை : நாற்றுக்களை நடுவதற்கு முன்பு 8 முதல் 12 மணி நேரம் உயர் பாத்திகளை சொட்டு நீர்ப் பாசனத்தைப் பயன்படுத்தி நன்கு நனைக்க வேண்டும். நாற்றுக்களை மேற் குறிப்பிட்ட இடைவெளியில் நட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்துக்குப் பின்பு இடைவெளி இருப்பின் அங்கு புதிய நாற்றுக்களை நடலாம்.
நீர்ப் பாசனம், நீர்வழி உரமிடல்: தினமும் சொட்டு நீர்ப் பசான முறையில் ஒரு மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தேவையான அளவு நீரில் கரையும் உரத்தை அட்டவணையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் சொட்டு நீர்ப் பாசனத்துடன் இணைக்கப்பட்டுள்ள உரத் தொட்டியின் மூலம் இட வேண்டும்.
பின்னால் செய்ய வேண்டிய நேர்த்தி: நடவு செய்த 30-வது, 60-வது நாளில் களை எடுத்து மண் அணைக்க வேண்டும். டிரையகாண்டனால் 125 மில்லி 30-வது நாளில் இருந்து 15 நாள் இடைவெளியில் மூன்று முறை தெளிக்கவும். பூப் பிடித்தலை அதிகரிக்க என்ஏஏ. 0.25 பிளோனோபிக்ஸ் என்ற அளவில் பூப் பூக்கும் தருணத்தில் தெளிக்க வேண்டும்.
அறுவடை, மகசூல்: மேற்கண்ட முறைகளை விவசாயிகள் கையாண்டால் 50 முதல் 120 நாள்கள் வரை மகசூல் அறுவடை செய்யலாம். வீரீய ஒட்டு ரகத்தில் ஹெக்டேருக்கு 40 முதல் 50 டன்கள் வரை மகசூல் கிடைக்கும். கத்தரி அறுவடை ரகத்திற்கேற்ப நாள்கள் மாறுபடும் என்று வேளாண் துறையினர் கூறியுள்ளனர்.

Source: கத்தரி-பயிரிட்டால்-அதிக-லாப/article2630407.ece

No comments:

Post a Comment