Wednesday 28 January 2015

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுவது பிப்.5 வரை நீட்டிப்பு

மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது பிப்ரவரி 5-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை தண்ணீர் திறந்து விடப்படும். குறுவை, சம்பா, தாளடி பயிர்களுக்கு மொத்தம் 330 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.
இந்த நிலையில், கடந்த ஆண்டில் (2014) ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் போதிய அளவு நீர் இருப்பு இல்லாததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதையடுத்து, போதிய அளவு மழை பெய்து, அணையின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்த பிறகு 2014 ஆகஸ்ட் 10-ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த நிலையில், புதன்கிழமை (ஜன.28) டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட வேண்டும். ஆனால், டெல்டா பகுதிகளில் சில இடங்களில் இன்னமும் அறுவடை முடியாமல் உள்ளது. அதனால், அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவதை நீட்டிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக உள்ளதால், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தண்ணீர் திறந்து விடுவதை பிப். 5-ஆம் தேதி வரை நீட்டித்து, நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக பொதுப்பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அணை நீர்மட்டம்:
இந்த நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் புதன்கிழமை காலை 80.60 அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 290 கன அடி வீதம் தண்ணீர் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர் இருப்பு 42.55 டி.எம்.சி.

Source: காவிரி-டெல்டா-பாசனத்துக்கு-/article2642262.ece

No comments:

Post a Comment