Wednesday 7 January 2015

12 கன்றுகளை ஈன்ற அதிசய பசு

பதிவு செய்த நாள்

07ஜன
2015 
00:00
அன்னைக்கு இணையானது பசு. உணவில் பால் முக்கிய பங்கு வகிக்கிறது. உடலுக்கு புரதச்சத்து முக்கியம் என்பதால் "பால் இல்லையே வாழ்க்கையே பாழ்' என்பர். பால் தவிர்க்க இயலாத ஒன்று. விவசாயிகளின் வாழ்வாதாரமே பசுக்கள் தான். பசு மாடு இருக்கும் வீடு குதூகலிக்கும் என்பது அனுபவ ரீதியான உண்மை. நாளுக்கு நாள் பால் தேவை அதிகரித்து வருவதால் விவசாயிகள் பலர் பால் பண்ணை நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கறவை மாடுகள் வளர்ப்பின் மூலம் மாதம் ரூ.பல லட்சம் லாபம் மட்டுமே ஈட்டும் அழிவில்லா ஒரே தொழில் பசு மாடு வளர்ப்பு.
மதுரை அலங்காநல்லூர் அருகே கல்லனையை சேர்ந்தவர் பார்த்திபன். வீட்டிலேயே சிறிய பால் பண்ணை நடத்தி வருகிறார். ஐந்து கறவை மாடுகள் மூலம் தினமும் 70 லிட்டர் கறந்து விற்கிறார். பசுவின் வாழ்நாள் அதிகபட்சம் 20 ஆண்டுகள். பார்த்திபன் வளர்க்கும் ஜெர்சி கலப்பின பசு, ஆண்டுக்கு ஒன்று என இதுவரை 12 கன்றுகளை ஈன்றுள்ளது. தற்போது தனது 18 வது வயதில் 13வது ஈற்றில் உள்ளது. பொதுவாக பசு ஒன்று 7 அல்லது 8 வரை கன்றுகள் ஈனும். 13 அல்லது 14வது வயதில் ஈற்று நின்று விடும். பார்த்திபன் வளர்க்கும் பசு இப்படி கன்றுகளை ஈன்று வருவது கால்நடை மருத்துவர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம் பசுவை பராமரிக்கும் பார்த்திபனின் வளர்ப்பு முறை தான் என கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர்.
பார்த்திபன் கூறுகையில், ""கழிவு நீரில் வளர்க்கும் புற்களை பசுக்களுக்கு கொடுக்க மாட்டேன். ஒத்திக்கு நிலம் வாங்கி புல் வளர்க்கிறேன். பசுக்களை நடக்க வைத்து மேய்ச்சலுக்கு விடுகிறேன். இதனால் பசுக்கள் உடல் ஆரோக்கியத்துடன் வளர்கிறது. தொழுவம் சுத்தமாக பராமரிக்கப்படுவதால் நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது. பசுக்களை தாயை போல் பாதுகாக்கிறேன். இதன் காரணமாகவே நான் வளர்க்கும் பசு தனது இறுதி காலத்திலும் செயற்கை முறை சினை முறைப்படி ஆண்டு தோறும் கன்றுகளை ஈன்று வருகிறது. 12 கன்றுகளை ஈன்ற பசுவின் மகள், பேத்தி, கொள்ளுப்பேத்தி என பண்ணையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பசுக்கள் மட்டுமே உள்ளன,'' என்றார்.
செய்யும் தொழிலே தெய்வம். எந்த தொழிலாக இருந்தாலும் அதில் உண்மை, உழைப்பு, நேர்மை இருக்க வேண்டும். கால்நடை வளர்ப்பில் வரலாற்று சாதனை படைத்து வரும் பார்த்திபன் போன்றவர்களை ஊக்கமளித்து அரசு அங்கீகரிக்கும் பட்சத்தில் பல பார்த்திபன்கள் உருவாவது உறுதி. மேலும் அறிய 98658 70439ல் பேசலாம்.
-கா.சுப்பிரமணியன், மதுரை.

Source: 

No comments:

Post a Comment