Thursday 27 November 2014

"துவரை இருந்தால் கவலை இல்லை'


நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி துவரைப் பயிர் சாகுபடி செய்தால் அதிக விளைச்சலும், நிரந்தர வருமானமும் பெற்று விவசாயிகள் கவலை இன்றி வாழலாம் என்று வேளாண் அறிவியல் நிலையம் தெரிவிக்கிறது.
பயறுவகை பயிர்களில் அதிகப் புரதச்சத்து இருப்பதால் துவரைக்கு எப்போதும் அதிக முக்கியத்துவம் உண்டு. சைவ உணவு உட்கொள்பவர்களுக்கு இது வரப் பிரசாதம். இப் பயிருக்கு அதிக முக்கியத்துவம் உண்டு என்றாலும் அதிக பரப்பளவில் சாகுபடி செய்வது வழக்கத்தில் இல்லை.
ஆனால் தற்போது புதிய ரகங்களைப் பயன்படுத்தி நவீன தொழில்நுட்பமான நடவு முறையில் சாகுபடி மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெறலாம்.
இதற்கான வழிமுறைகள் குறித்து காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் (உழவியல்) முருகன் கூறிய விவரங்கள்:
தமிழ்நாட்டில் ஆடி, புரட்டாசிப் பட்டங்கள், கோடைப் பருவகாலங்களில் துவரை பயிரிடப்பட்டாலும், ஆடிப் பட்டத்தில்தான் சாகுபடிப் பரப்பு அதிகமாக உள்ளது. இப் பயிரின் சராசரி விளைச்சல் ஹெக்டேருக்கு 763 கிலோ ஆகும்.
பருவம், ரகங்கள்: ஆடிப் பட்டம்: எஸ்.ஏ.-1, கோ-5, 6, கோ.பி,எச். -1, 2, வம்பன் -1, 2
புரட்டாசிப் பட்டம் : கோ-5, கோ.பி,எச். -1, 2, கோ (ஆர்.ஜி) 7, ஏ.பி.கே. 1. கோடைக்காலம்: கோ -4, 5, கோ.பி.எச்.1, 2, பி.எஸ்.ஆர்.1, வம்பன் - 1, எஸ்.ஏ.1.
நடவுமுறை சாகுபடி:
துவரையில் நடவு முறை சாகுபடிக்கு ஏக்கருக்கு 1 கிலோ விதை மட்டுமே தேவை. ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் டிரைகோடெர்மாவிரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தைக் கலக்க வேண்டும். பூஞ்சாணக்கொல்லி மருந்துடன் விதை நேர்த்தி செய்து 24 மணி நேரத்திற்கு பின் ரைசோபியம் நுண்ணுயிர் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்குத் தேவையான விதையுடன் ஒரு பொட்டலம் (200 கிராம்) ரைசோபியம் கலவையை 100 மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் நன்கு கலந்து 15 நிமிடம் நிழலில் உலர வைத்து விதைக்க வேண்டும்.
மணல், மண், எரு ஆகியவற்றை சம அளவில் கலந்து 200 மைக்ரான் அளவுள்ள பாலிதீன் பைகளில் (6க்கு 4) நிரப்பி விதைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். பைகளில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்க நான்கு துளைகள் போடலாம். பிறகு விதை நேர்த்தி செய்த விதைகளை ஒரு பைக்கு ஒரு விதை என்ற அளவில் 1 செ.மீ. ஆழத்தில் விதைத்து, ஒவ்வொரு நாளும் தண்ணீர் தெளித்து பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு விதைப்பு செய்யப்பட்ட பைகள் நிழலான இடங்களில் வைத்து 25 - 30 நாள்கள் பராமரிக்கப்பட்டு நடவுக்குப் பயன்படுத்த வேண்டும். நடுவதற்கு சில நாள்களுக்கு முன்னர் இளம் வெயிலில் நாற்றுக்களை வைத்து கடினப்படுத்தி பின்பு நடவு செய்வது நல்லது.
வடிகால் வசதிகொண்ட செம்மண் அல்லது வண்டல் மண் நிலங்கள் துவரை சாகுபடி செய்ய மிகவும் ஏற்றது. பிப்ரவரி மாதத்தில் ரபி பருவப் பயிர்கள் அறுவடை முடிந்தவுடன் மார்ச் - எப்ரல் மாதங்களில் 2, 3 முறை கோடை உழவு செய்யப்பட வேண்டும். துவரை நடவு செய்வதற்கு சுமார் 3 வாரங்களுக்கு முன்பு நன்கு மக்கிய எருவை ஏக்கருக்கு 5 டன் அல்லது மண்புழு உரம் 2.5 டன் அளவில் இடலாம்.
இறவை அல்லது மானாவாரியில் தனிப்பயிர் சாகுபடிக்கு 15 சதுர செ.மீ. அளவுள்ள குழிகளை 5 க்கு 3 அடி இடைவெளியிலும் (1 ஏக்கருக்கு 2904 பயிர்), 6 க்கு 3 அடி (1 ஏக்கருக்கு 2420 பயிர்) என்ற இடைவெளியிலும் குழிகள் எடுக்க வேண்டும்.
நாற்றுகளை நடுவதற்கு 15 நாள்களுக்கு முன்பு குழிகளை மண், எருவைக் கொண்டு நிரப்பி வைக்க வேண்டும். பின்னர் ஒரு குழிக்கு ஒரு செடி வீதம் நடவு செய்ய வேண்டும்.
ஊடுபயிர் செய்யும் இடங்களில் நடவுக்கு முன் உளுந்து, பாசிப்பயறு, சோயா, மொச்சை போன்ற பயிர்களை விதைத்து, பிறகு துவரை நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். நடவு செய்தவுடன் நீர்ப்பாசனம் செய்யப்பட வேண்டும். பின்பு மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப 3 முதல் 4 முறை பாசனம் செய்யப்பட வேண்டும்.
நடவு செய்த 30 முதல் 40 நாள்கள் வரை களையின்றி பராமரிக்க வேண்டும். மேலும், நடவுப் பயிர்களில் கிளைகள் அதிக எண்ணிக்கையில் தோன்றுவதால் செடிகள் சாயாமல் இருக்க மண் அணைத்துப் பராமரிக்கலாம்.
உர நிர்வாகம்:
மானாவரி நிலத்தில் 1 ஹெக்டேர் நிலத்தில் யூரியா 27.5 கிலோ, சூப்பர் 156 கிலோ, பொட்டாஷ் 21 கிலோ என்ற வீதத்தில் பயன்படுத்த வேண்டும். இரவையில் யூரியா 55 கிலோ, சூப்பர் 312 கிலோ, பொட்டாஷ் 42 கிலோ பயன்படுத்தலாம்.
நடவு நட்ட 20 முதல் 30 நாள்கள் கழித்த மண் அணைப்பதற்கு முன் மேற்கூறிய உரங்களை இட வேண்டும். மேலும், துத்தநாகம், கந்தக சத்தை அளிக்கும் துத்தநாக சல்பேட் (10 கிலோ) உரத்தையும் செடியைச் சுற்றி இடுவதால் அதிக விளைச்சல் கிடைக்கும். நடவுசெய்த 20 முதல் 30 நாள்கள் கழித்து, 5 முதல் 6 செ.மீ. அளவுக்கு
நுனிக் குருத்தைக் கிள்ளி விடுவதால் பக்கக் கிளைகள் அதிகரித்து விளைச்சல் கூடுகிறது.
பூக்கள் உதிர்தல்:
பூக்கள் உதிர்வதைத் தடுப்பதன் மூலம் 10 முதல் 20 சதவீத விளைச்சல் இழப்பைத் தவிர்க்கலாம். நாப்தலின் அசிடிக் ஆசிட் (என்.ஏ.ஏ.) பயிர் ஊக்கியை 40 பி.பி.எம். என்ற அளவில் பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், 15 நாள் இடைவெளியில் மறுமுறையும் தெளிக்க வேண்டும். இதைப் பூச்சி, பூஞ்சாண மருந்துகளுடன் கலந்தோ அல்லது உப்பு நீரில் கலந்தோ தெளிக்கக் கூடாது.
கைத்தெளிப்பான் கொண்டு செடிகள் நன்கு நனையுமாறு அதிகாலை அல்லது மாலையில் தெளிக்க வேண்டும்.
பூக்கள் உதிர்வதைக் குறைப்பதற்கும், அதிக காய் பிடிப்பதற்கும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டுள்ள பயறு ஒண்டர் ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் தருணத்திலும், 15 நாள்கள் கழித்து ஒரு முறையும் தெளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மானாவாரியில் 10 முதல் 15 விழுக்காடு விளைச்சலை அதிகரிக்கலாம்.
பயிர்ப் பாதுகாப்பு முறைகள்:
1. வம்பன் 1, 2 அல்லது ஏ.பி.கே. 1 அல்லது கோ (ஆர்.ஜி.7) இரகங்களைத் தேர்வு செய்வது சிறந்தது.
2. ஹெக்டேருக்கு 12 ஹெலிக்கோவெர்ப்பா இனக்கவர்ச்சிப் பொறிகள் அமைத்து பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்தல் வேண்டும்.
3. ஹெக்டேருக்கு 50 பறவைத் தாங்கிகள் அமைத்து இரை விழுங்கிகளை ஊக்குவித்தல் வேண்டும்.
4. முடிந்தவரை காய்ப்புழுக்கள் மற்றும் பூ வண்டுகளை சேகரித்து அழிக்க வேண்டும்.
5. பச்சைக் காய்ப்புழு சேதம் மட்டும் இருப்பின் ஹெக்டேருக்கு 1.5 லிட்டர் வீதத்தில் ஹெலிக்கோவெர்ப்பா என்.பி.வி. கரைசல் தெளித்தல் வேண்டும்.
6. காய் துளைப்பானின் சேதம் பொருளாதார சேத நிலையை விட அதிகமிருப்பின் 5 சதவீதம் வேப்பங்கொட்டைச்சாறு அல்லது 1 லிட்டர் தண்ணீரில் புரோபனோபாஸ் 2.5 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடா குளோபிரைடு கலந்து தெளிக்கவும். வாடல்நோய், வேரழுகல் நோயைக் கட்டுப்படுத்த 10 லிட்டர் தண்ணீரில் 25 கிராம் கார்பென்டசின் கரைத்து செடியின் வேர் பாகம் நனையுமாறு ஊற்ற வேண்டும்.
7. மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த எதிர்ப்புத்திறன் கொண்ட வம்பன் 5, 6 ரகங்களைப் பயிரிடவும், நோய் பரப்பும் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த 1 லிட்டர் தண்ணீரில் இமிடாகுளோபிரைடு 0.4 மி.லி கலந்து தெளிக்கலாம்.
அறுவடை:
விதைத்த 150 முதல் 180 நாள்களில் பச்சைக் காய்கள் முதல் அறுவடைக்கு வரும் 55 முதல் 60 நாள்கள் சென்று மறுமுறை அறுவடை செய்யலாம். 210 நாள்களில் காய்ந்த காய்களை முதல் முறையும், 30 நாள்கள் சென்று மறுமுறையும் அறுவடை செய்யலாம்.
சேமிப்பு:
 அறுவடை செய்து பிரித்தெடுத்த விதைகளை 10 சதவீத ஈரப்பதத்திற்கு வரும் வரை காய வைக்க வேண்டும். வண்டுகள் தாக்காமலிருக்க 100 கிலோ விதையுடன் 1 கிலோ ஊக்குவிக்கப்பட்ட களிமண் கலந்து சேமித்து வைக்கலாம்.
மகசூல்:
பச்சைக் காய்கள் ஒரு செடிக்கு 1 முதல் 3 கிலோ, மணிகள் 1 ஹெக்டேருக்கு 2 ஆயிரம் கிலோ.
மேலும் விவரங்களுக்கு காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தை 044 - 27452371 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் அவர்.

Source: http://www.dinamani.com/agriculture/2014/11/27/துவரை-இருந்தால்-கவலை-இல்லை/article2542474.ece

No comments:

Post a Comment