தேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகியது. இதன் காரணமாக தென்னை விவசாயத்தின் பரப்பளவு சுருங்கி கொண்டு வந்தது. லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை கூடுதல் விலை கொடுத்து வாங்கி நீர் பாய்ச்ச முடியாமல் சில விவசாயிகள் மரங்களை அழித்து விட்டு மாற்று விவசாயத்தில் ஈடுபட்டனர்.
இன்னும் சிலர் வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்து விட்டனர். இந்த நிலையில் பெரியகுளம் அருகே கெங்குவார் பட்டியை சேர்ந்த விவசாயி கே.வி.காமராஜ் இவர் தனக்கு சொந்தமான 15 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வருகிறார். இது குறித்து ‘தி இந்து’விடம் விவசாயி காமராஜ் கூறுகையில், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தென்னந்தோப்புகள் அழிக்கப்பட்டு வந்தது. என் தோட்டத்திலும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது மிகவும் வேதனையடைந்தேன். அந்த நேரத்தில் தோட்டக்கலை துறை அதிகாரிகள் என்னை சந்தித்து தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்ய கோரினர். முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது. அவர்கள் என்னை உற்சாகப்படுத்தினர்.
இதனையடுத்து எனது 15 ஏக்கர் தென்னந்தோப்பில் கோகோ சாகுபடி செய்தேன். ஒரு ஏக்கருக்கு 200 கன்றுகள் நடவு செய்யப்பட்டது. சாகுபடி செய்த 3 ஆண்டுகளில் பலன் கிடைக்கத் தொடங்கியது. இதன் மூலம் சுமார் 40 ஆண்டுகள் வரை பயன்பெற முடியும். தோட்டக்கலை துறையினரால் ஒரு ஹெக்டேருக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் வழங்கப்பட்டது. சொட்டு நீர் பாசனத்தின் மூலம் சாகுபடி நடைபெற்று வருகிறது. கோகோ மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்து இலைகள் நல்ல இயற்கை உரமாகிறது. தரைப்பகுதியில் காய்ந்த இலைகள் இருப்பதால் ஈரப்பதத்தினை தக்கவைத்துக் கொள்கிறது. வறட்சியை சமாளிக்க இந்த கோகோ சாகுபடியும், தென்னைமரத்திற்கு நல்ல வரப்பிரசாதமாகவும் அமைந்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து ஜூன் மாதம் வரை சீசன் காலம் ஆகும். அப்போது விளைச்சல் அதிகமாக இருக்கும்.
சராசரியாக ஒரு மரத்தில் இருந்து ஒன்று முதல் இரண்டு கிலோ வரை கோகோ கிடைக்கிறது. தற்போது மார்க்கெட்டில் கிலோ ரூ.190 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 400 கிலோ வரை விற்பனை செய்கிறேன். இதனை சந்தைபடுத்துதலும் மிகவும் எளிது கம்பம் பகுதிகளிலும் தற்போது கோகோ சாகுபடி தொடங்கியுள்ளது என்றார். கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய் ஈட்டி வரும் இவரை 8220627712 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Source: http://tamil.thehindu.com/business/கோகோ-சாகுபடி-செய்து-அதிக-வருவாய்-ஈட்டும்-தேனி-விவசாயி/article6635692.ece?widget-art=four-rel