Tuesday 25 November 2014

சின்ன சின்ன செய்திகள்
பெரியாறு - வைகைப் பாசனத்திட்டத்தில் நீர் மேலாண்மை : பெரியாறு - வைகை பாசன உழவர்களின் பயன்பாட்டிற்காக புதிய நெல் இரகங்கள் பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. தட்பவெப்ப நிலைக்கு உகந்த நெல் இரகங்களை கண்டுபிடிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மதுரை வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தென்மாவட்ட உழவர்கள் பயன்பெறும் பொருட்டு அகில இந்திய ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை ஆராய்ச்சி திட்டத்தின் மூலம் பெரியாறு - வைகைப் பாசனத் திட்டத்தில் 1971ம் ஆண்டு முதல் நீர் மேலாண்மை பற்றிய ஆய்வுகள் முக்கிய பயிர்களான நெல், கரும்பு, வாழை ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நெல்லில் உழவர்கள் தொடர்ந்து நீர்த்தேக்கம் ஒவ்வொருமுறையும் 5செ.மீ. உயரத்திற்கு நீர் கட்டி கட்டிய நீர் மறைந்த ஒரு நார்ச்சத்து மீண்டும் 
5 செ.மீ. உயரத்திற்கு நீர்க்கட்டுவது (காய்ச்சலும், பாய்ச்சலும்) சிறந்த பாசன முறையாக தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்பாசன முறையில் பயிர்களின் வளர்ச்சி, விளைச்சல் ஆகியவற்றில் முன்னேற்றம் காண்பதோடு நீர் சிக்கனமும் சுமார் 20 சதம் வரை கிடைக்கிறது.
பெரியாறு - வைகை பாசனத்திட்டத்தில் நீர்பற்றாக்குறையுள்ள பொழுது நெல்லுக்கு முறை பாசனம் சிறந்த தொழில்நுட்பமாகக் கண்டறியப்பட்டுள்ளது. இம்முறையில் வாரத்தில் 4 நாட்களுக்கு வாய்க்கால்களில் தண்ணீர் பெறப்பட்டு வயல்களுக்கு பாய்ச்சியும், மீதம் மூன்று நாட்களுக்கு மடைகளை அடைத்து நீர் கொடுக்காமல் இருக்கலாம். மேலும் 6 நாட்கள் வாய்க்கால்களில் தொடர்ந்து நீர் பெறப்பட்டு அதில் வயலில் இரண்டு பாசனமும், அதைத்தொடர்ந்து மடைகளில் 4 நாட்கள் தண்ணீர் தெளிக்காமல் இருந்து, மறுபடியும் 6-4 சுழற்சி முறையில் தண்ணீர் கொடுப்பதனால் நெல் விளைச்சல் பாதிப்பில்லை. மேலும் சுமார் 15-20 சதம் வரை நீர் சேமிப்பும் கிடைக்கிறது.
நீர் தட்டுப்பாடான காலங்களில் நேரடி நெல் விதைப்பும் சிறந்த தொழில்நுட்பமாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு தொழிகலக்கிய வயல்களை நன்றாக சமப்படுத்த வேண்டும். சமப்படுத்திய வயல்களில் நெல் விதைக்கும் கருவியைக் கொண்டு முளைகட்டிய நெல் விதைகளை வரிசையில் விதைக்க முடியும். இதன் மூலம் தேவையான பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க முடியும். 
மேலும் பாசன நீரை 5 செ.மீ. உயரத்திற்கு கட்டி, கட்டிய நீர் மறைந்தவுடன் ஒருநாள் கழித்து மீண்டும் நீர் கட்ட வேண்டும். இதனால் நேரடி நெல் விதைப்பில் நீரைச் சிக்கனப்படுத்துவதுடன் நெல் பயிரிடக் கூடிய வயலில் சுமார் 10 நாட்கள் வரை காலஅளவு சேமிப்பும் கிடைக்கிறது. தகவல்: முனைவர் கு.இராமசாமி, துணைவேந்தர், த.வே.ப.கழகம், கோயம்புத்தூர்-641 003.
இனிப்பு மக்காச்சோளம் : இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் உழவும், கொக்கி கலப்பை மூலம் ஓர் உழவும் செய்து களைகளை அகற்றி, ஏக்கருக்கு 3 டிப்பர் என்ற அளவில் தொழுஉரம் கொட்டி கலைத்து விட வேண்டும். ஓர்அடி இடைவெளியில், ஓர் அடி அளவுக்கு பார் அணைத்து அதன் மையத்தில் ஓர் அடிக்கு ஒரு விதை வீதம் ஒரு அங்குல ஆழத்தில் நடவு செய்து தண்ணீர் கட்ட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ விதை தேவைப்படும்.
விதைத்த 3ம் நாள் முளைக்க ஆரம்பிக்கும். அன்று ஒரு தடவை தண்ணீர் கட்ட வேண்டும். பின்னர் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து தண்ணீர் கட்டினால் போதும். 20ம் நாளில் களை எடுத்து பரிந்துரைக்கப்பட்ட உரம் வைக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒருமுறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசனத் தண்ணீரில் கலந்து விட வேண்டும். வேறு எந்த பராமரிப்பும் தேவையில்லை. பெரும்பாலும் பூச்சி, நோய் தாக்குதல் இருக்காது. கதிர் வருவதற்கு முன்பாக பூச்சிகள் தாக்கினால் மூலிகை பூச்சி விரட்டி தெளிக்கலாம்.
55ம் நாளில் ஆண் பூவெடுக்கும் 60-ம் நாளில் பெண் பூவெடுத்து, கதிர் உருவாகும். 75ம் நாளிலிருந்து கதிர்முற்ற ஆரம்பிக்கும். தொடர்ந்து 90ம் நாள் வரை தினம் அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 6 டன் அளவிற்கு கதிர்கள் கிடைக்கும். ஒவ்வொரு கதிரும் அரை அடி நீளத்தில் இருக்கும். கிலோவுக்கு 3-4 கதிர்கள் நிற்கும்.
அனுபவ விவசாயி சேகர், திருவண்ணாமலை மாவட்டம், சு.கீழநாச்சிப்பட்டு கிராமம், தினமும் 
200 கிலோவில் இருந்து 300 கிலோ அளவுக்கு அறுவடை செய்து 1 கிலோ 20 ரூபாய்க்கு உழவர் சந்தையில் விற்பனை செய்கிறார். 1 ஏக்கரில் கிடைக்கிற 6 டன் கதிர் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வரை வருமானம் எடுக்கிறார். 30 ஆயிரம் ரூபாய் செலவு போக 90 ஆயிரம் 
ரூபாய் லாபம் கிடைக்கிறது. கமிஷன் கடைகளுக்கு அனுப்பினால் 50 ஆயிரம் ரூபாய் தான் லாபம் கிடைத்திருக்கும் என்கிறார். தொடர்புக்கு : சேகர், போன்: 97876 00991.
டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்.

Source: http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22864&ncat=7

No comments:

Post a Comment