Thursday 20 November 2014

'புளிக்கிறது' திராட்சை! ஏமாற்றம் தருகிறது சாகுபடி; மாற்றுப்பயிருக்கு மாறும் விவசாயிகள்
கடந்த காலங்களில் லாபத்தை ஈட்டித் தந்த திராட்சை சாகுபடி, பருவநிலை மாற்றம், வறட்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தரம் குறைந்து, விலையிலும் வீழ்ச்சி கண்டு வருகிறது. வருமான இழப்பு காரணமாக, விவசாயிகள் மாற்றுப் பயிர் சாகுபடிக்கு தங்கள் மனதையும், நிலத்தையும் பண்படுத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் பகுதியில் மட்டுமே, திராட்சை சாகுபடியாகிறது. மணல் கலந்த செம்மண் நிலம், வற்றாத நீர் பாசனம் சாதகமாக இருப்பதால், விவசாயிகள் திராட்சை சாகுபடிக்கு மாறினர்.கடந்த, 2002- 2003ம் ஆண்டுகளில், தொண்டாமுத்துார், மாதம்பட்டி, தீத்திபாளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் திராட்சை சாகுபடிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, 3,000 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டது.தரமான ரகம், நிறம் மற்றும் சுவை காரணமாக இப்பகுதி திராட்சைக்கு மவுசு ஏற்பட்டு, கூடுதல் விலையும் கிடைத்தது. ரம்ஜான் மாதத்தில் முதல் ரக திராட்சை, 60 ரூபாய் வரை விற்கிறது. மற்ற நாட்களில், 35 ரூபாய்க்கு குறையாமல் விற்பனையானது. தரம், சுவை காரணமாக கேரள வியாபாரிகள் கோவையில் உற்பத்தியாகும் திராட்சையில், 75 சதவீதத்தை வாங்கிச் சென்றனர். வியாபாரிகள் இன்றி நேரடியாக கேரளாவுக்கு அனுப்புவதும் நடைமுறையில் உள்ளது.

திராட்சை சாகுபடியாளர்களுக்காக, மாதம்பட்டியில் மாவட்ட திராட்சை உற்பத்தியாளர் சங்கம் செயல்படுகிறது. இச்சங்கத்தில், 300 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். திராட்சையின் தரத்துக்கு ஏற்றவகையில் விலையும் பெற்றுத்தரப்படுகிறது.லாபத்தை நோக்கி இருந்த திராட்சை சாகுபடி, சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கடுமையான வறட்சியால், பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால், திராட்சையின் தரம் குறைந்து, விலையிலும் வீழ்ச்சியை கண்டது.தற்போதைய நிலையில் ஒரு கிலோ திராட்சை 20 ரூபாய்க்கு விற்கிறது. இது உற்பத்திச் செலவை விட மிகக்குறைவு. இது உற்பத்தியாளர்களுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு கிலோ திராட்சை, 40 ரூபாய்க்கு விற்றால் மட்டுமே, விவசாயத்துக்கு லாபமான தொழிலாகும். ஆனால், திராட்சை சாகுபடி பெரும் இழப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் சாகுபடி பரப்பும் குறைந்து விட்டது.

மாவட்ட திராட்சை உற்பத்தியாளர் சங்க தலைவர் விஜயன் கூறுகையில்,''சமீபத்தில் ஏற்பட்ட பருவநிலை மாற்றம், திராட்சை சாகுபடிக்கு பலத்த அடியை கொடுத்துள்ளது. பூ அழுகல், காய் அழுகல், பழம் உடைதல் ஏற்பட்டு, விவசாயத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பெரும் இழப்பை கொடுத்துவிட்டது. ஒரு ஏக்கர் சாகுபடிக்கு, 6 லட்சம் ரூபாய் வரை செலவிட்டு, நோய் தாக்காமல் இருக்க 60 ஆயிரம் செலவில் மருந்து, உரமிட்டு காப்பாற்ற வேண்டியுள்ளது. ''ஆனாலும், செலவினங்கள் போக ஏக்கருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை லாபம் கிடைத்தது. தற்போது, இந்நிலை மாறியுள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். வேறு வழியில்லாமல், மாற்றுப் பயிர் சாகுபடிக்கு தங்களையும், நிலத்தையும் பண்படுத்தி வருகின்றனர்,'' என்றார்.

திராட்சை சாகுபடியாளர்களை இதுவரை கண்டுகொள்ளாத அரசு, அவர்களை காப்பாற்ற புதுவழியை கண்டுபிடிக்க வேண்டும். அரசு வழங்கும் மானியமும், பெரும் மோசடிக்கு பிறகே விவசாயிகளை சென்றடைகிறது. வேளாண் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புது ரகத்தை கண்டு பிடித்து விவசாயிகளின் வாழ்க்கையை புதுப்பிக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த திராட்சை விவசாயிகளின் கருத்து.

Source: http://www.dinamalar.com/news_detail.asp?id=1119760

No comments:

Post a Comment